பிரபல பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீய்பரின் முகம் முடக்கவாத நோயால் பாதிப்பு
- ஜஸ்டின் பீய்பர் ‘ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம்’ என்ற பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
- இதனால் தன் முகம் பாதி அளவில் செயல்படாமல் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்:
'பேபி' பாடல் மூலம் பிரபலமடைந்த பாப் பாடகர் ஜஸ்டின் பீய்பருக்கு உஅக முழுவதும் ரசிகர்கள் அதிகம். 28 வயதாகும் அவர் கனடாவின் டொரண்டோவில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு முன் தான் 'ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம்' என்ற பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது:-
இந்த பாதிப்பால் என் முகத்தின் ஒரு பக்கம் முழு அளவில் முடங்கி போயுள்ளது. அதேசமயம் எனது கேட்கும் திறனையும் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. என் மூக்கையும் ஒரு பக்கம் அசைக்க முடியவில்லை. அதனால், எனது நிகழ்ச்சிகளை நான் ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
இதனால் பெருத்த ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு, என்னால் உடல்ரீதியாக, செயல்பட முடியவில்லை என வெளிப்படையாக தெரிவித்து கொள்கிறேன். இதிலிருந்து குணமடைய முகத்திற்கு வேண்டிய பயிற்சிகள் அளித்து வருகிறேன். ஓய்வு எடுத்து கொள்கிறேன். நான் என்ன சாதிக்க வேண்டும் என பிறந்தேனோ அதற்காக தயாராகி 100 சதவீதம் முழுமையாக திரும்பி வருவேன்.
இவ்வாறு ஜஸ்டின் பீய்பர் தெரிவித்தார்.
இதையடுத்து அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.