உலகம்

நேரடி விவாதத்தில் டிரம்பை பின்னுக்கு தள்ளிய கமலா ஹாரிஸ்- கருத்துக்கணிப்பில் 63 சதவீதம் பேர் ஆதரவு

Published On 2024-09-12 06:38 GMT   |   Update On 2024-09-12 06:38 GMT
  • விவாதத்தில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டதாக பலர் கருத்து தெரிவித்தனர்.
  • டிரம்ப் பெரும்பாலும் உண்மைகளில் இருந்து விலகிச் சென்றார்.

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

நேற்று இருவரும் பங்கேற்ற நேரடி விவாத நிகழ்ச்சி பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியாவில் நடந்தது. இதை ஏ.பி.சி ஊடகம் நடத்தியது.

இதில் பொருளாதாரம், குடியேற்றம், ரஷியா-உக்ரைன் போர், இஸ்ரேல்-காசா போர், நிர்வாகம், கருக்கலைப்பு உள்ளிட்ட பல்வேறு விவாகரங்கள் குறித்து காரசாரமாக விவாதித்தனர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் சிரித்த முகத்துடனும், டிரம்ப் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமலும் இருந்தனர். விவாதத்தில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டதாக பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேரடி விவாதத்தில் வெற்றியாளர் யார் என்று அமெரிக்க ஊடகங்கள் கருத்துக்கணிப்பு நடத்தின. இதில் டிரம்பை கமலா ஹாரிஸ் பின்னுக்கு தள்ளினார்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிசுக்கு 63 சதவீத பேர் ஆதரவு தெரிவித்தனர். டிரம்புக்கு 37 சதவீத பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல் மற்ற ஊடகங்களின் கருத்துக்கணிப்புகளிலும் கமலா ஹாரிசே முன்னிலையில் உள்ளார்.

சி.என்.என் ஊடகம் கூறும்போது, "டொனால்ட் டிரம்பை விட துணை அதிபர் கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டார் என்பதை அமெரிக்க வாக்காளர்கள் பரவலாக ஒப்புக்கொள்கிறார்கள்" என்று தெரிவித்தது.

வாஷிங்டன் போஸ்ட் கூறும்போது, "டிரம்புக்கு எதிராக கமலா ஹாரிஸ் கூர்மையான கருத்துகளை முன்வைத்தார். டிரம்ப் பெரும்பாலும் உண்மைகளில் இருந்து விலகிச் சென்றார்" என்றது.

நியூயார்க் டைம்ஸ் கூறும்போது, "கமலா ஹாரிஸ் தெளிவான செய்தியை வழங்கினார். அதே நேரத்தில் டிரம்ப் கோபமாகவும் தற்காப்புடனும் தோன்றினார்" என்று தெரிவித்தது.

எம்.எஸ்.என்.பி.சி ஊடகம் கூறும்போது, "கமலா ஹாரிஸ் விவாதம் முழுவதும் நிதானமாகவும், தகுதியுடனும் இருந்தார். டிரம்ப் விரக்தியடைந்து காணப்பட்டது தெளிவாக தெரிந்தது" என்று தெரிவித்தது.

இதன்மூலம் விவாத நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.

Tags:    

Similar News