உலகம்

கென்யா தேர்தலில் ருசிகரம்: ஓட்டுக்காக பொதுக்கழிவறைகளை சுத்தம் செய்யும் வேட்பாளர்கள்

Published On 2022-08-05 02:38 GMT   |   Update On 2022-08-05 02:38 GMT
  • வேட்பாளர்கள் வாக்காளர்களைக் கவர்ந்து ஓட்டு வாங்குவதற்கான பல்வேறு வேலைகளில் இறங்கி உள்ளனர்.
  • பெண் வாக்காளர்களை கவர்வதற்காக காய்கறிகளை நறுக்கித்தருகிறார்கள்.

நைரோபி :

ஆப்பிரிக்க பாரான கென்யாவில் வரும் 9-ந் தேதி அதிபர் தேர்தலும், பாராளுமன்ற பொதுத்தேர்தலும், கவர்னர் தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடுகிற அந்த நாட்டின் அரசியல்வாதிகள் தேர்தல் பிரசாரத்தின்போது தங்களது ஆடம்பர வாழ்க்கையைக் கைவிட்டு விட்டனர். அவர்கள் வாக்காளர்களைக் கவர்ந்து ஓட்டு வாங்குவதற்கான பல்வேறு வேலைகளில் இறங்கி உள்ளனர்.

நமது நாட்டில் வேட்பாளர் வாக்காளர்களைக் கவர்வதற்கு டீக்கடையில் டீ தயாரித்தார், புரோட்டா கடையில் புரோட்டா போட்டார் என்றெல்லாம் செய்திகளை அறிந்திருக்கிறோம்.

ஆனால் கென்யாவில் ஒருபடி மேலே போய்விட்டார்கள். அங்கு தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் துர்நாற்றம் வீசுகிற பொதுக்கழிவறைகளை துடைப்பத்துடனும், வாளியுடனும் சென்று சுத்தமாய்க் கழுவி விடுகிறார்கள். பெண் வாக்காளர்களை கவர்வதற்காக வீடுகளுக்கு ஓட்டு வேட்டையாட செல்கிறபோது வேட்பாளர்கள் காய்கறிகளை நறுக்கித்தருகிறார்கள். நைரோபி கவர்னர் பதவிக்கு போட்டியிடுகிற இகாதே என்ற வேட்பாளர் (படத்தில் இருப்பவர்) பொதுக்கழிவறைகளை சுத்தம் செய்வதுடன், வாக்காளர்களின் கார்களைக் கழுவி விடுகிறாராம். அவர் இரவு விடுதிகளில் மது பரிமாறும் வேலையிலும் ஈடுபடுவது வாக்காளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

ஆனால் அரசியல்வாதிகளின் இந்த விளம்பர நாடகம், வாக்காளர்களுக்கு நன்றாகத் தெரியும், அவர்கள் இந்த நாடகங்களால் ஈர்க்கப்பட மாட்டார்கள் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நைரோபி வாக்காளர் ஆனி வாம்புய் இதுபற்றி சொல்லும்போது, "தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் வரையில் அரசியல்வாதிகளுக்கு சந்தைகள் எங்கே இருக்கின்றன என்பதுகூட தெரியாது. நாங்கள் இந்த நகரத்தில் வாழ்வதற்காக போராடுகிறோம். ஆனால் விலை உயர்ந்த கடைகளில் பொருட்கள் வாங்குகிறவர்கள், எங்கள் ஓட்டுகளை விரும்புகிறபோது, எங்களைப் புரிந்துகொள்வதுபோல நடிக்க வருகிறார்கள்" என வேதனை தெரிவித்தார்.

ஆனாலும் அரசியல்வாதிகள் ஓட்டு வேட்டையின்போது புதுப்புது உத்திகளை பின்பற்றுவது கென்யாவில் குறையவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News