இங்கிலாந்தில் காலிஸ்தான் ஆதரவாளருக்கு 28 மாதம் ஜெயில்
- காலிஸ்தான் ஆதரவாளர் குர்பிரித்சிங் என்பவர் தாக்கி காயப்படுத்தியதாக புகார்கள் எழுந்தது.
- பின்னர் அவர் ஜல்வர்த் கிரவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வசித்து வரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது இந்திய தூதரகம் முன்பு போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் மேற்கு பகுதியில் உள்ள சவுத்ஹாலில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி இந்திய சுதந்திரதின விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்டனர். அப்போது ஆஷிஷ் சர்மா மற்றும் நானக் சிங் ஆகிய 2 இந்திய வம்சாவளியினரை காலிஸ்தான் ஆதரவாளர் குர்பிரித்சிங் என்பவர் தாக்கி காயப்படுத்தியதாக புகார்கள் எழுந்தது.
இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. இச் சம்பவம் தொடர்பாக குர்பி ரித் சிங்கை இங்கிலாந்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜல்வர்த் கிரவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 28 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.