கடைசி நிமிடத்தில் தற்காலிக தீர்வு: முடக்கத்தில் இருந்து தப்பித்த அரசு
- அகதிகள் பிரச்சனையால் குடியரசு உறுப்பினர்கள் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மறுத்தனர்
- செலவினங்களுக்கு உதவும் வகையில் $459 பில்லியன் ஒதுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது
அமெரிக்க அரசின் பல்வேறு துறைகளின் செலவினங்களுக்கு தேவைப்படும் நிதி பங்கீட்டிற்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் வேண்டும்.
இரு கட்சி ஜனநாயக முறை நிலவி வரும் அமெரிக்காவில், மத்திய அரசின் செலவினங்களில் பெரும் பகுதியை ரத்து செய்ய வேண்டும் என்றும், அமெரிக்காவின் தெற்கு எல்லைகள் வழியாக அகதிகள் சட்டவிரோதமாக உள்ளே நுழைவதை தடுக்கும் விதமாக நிதி பங்கீடு அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தி, குடியரசு கட்சி உறுப்பினர்கள், செலவின மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வந்தனர்.
இதனால், அமெரிக்க அரசின் முக்கிய துறைகளின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பணிகள், நிதியின்றி முடங்கும் அபாயம் ஏற்பட்டது.
இந்நிலையில், முடக்கத்தை தவிர்க்க கீழ்சபை எனப்படும் பிரதிநிதிகள் சபை (House of Representatives) மற்றும் மேல் சபை எனப்படும் செனட் (Senate) ஆகிய இரு சபை உறுப்பினர்களுக்கும் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில், இறுதியாக ஒரு சமரச முடிவு எட்டப்பட்டது.
அரசின் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கும் மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவறியது. செனட் சபையில் இதற்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் கிடைத்தன.
இதன் மூலம், முதற்கட்டமாக, அரசின் செலவினங்களுக்கு உதவும் வகையில் செனட் சபை $459 பில்லியன் ஒதுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக, இரு சபைகளின் ஒப்புதலுடன் நிறைவேறிய இந்த மசோதா, அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
இதுவரை அமெரிக்காவில் 10 முறை அரசு முடக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது பல அரசு ஊழியர்கள் தற்காலிகமாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அரசு பூங்கா பராமரிப்பு ஊழியர்களுக்கு கூட ஊதியம் வழங்க முடியாததால், பூங்காக்கள் மூடப்பட்டன.