இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்த மனிஷா கொய்ராலா
- இங்கிலாந்து, நேபாளம் இடையிலான நட்பு ஒப்பந்தம் 100 ஆண்டு கடந்துள்ளது.
- நேபாளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மனிஷா கொய்ராலா இங்கிலாந்து பிரதமரை சந்தித்தார்.
லண்டன்:
இங்கிலாந்துக்கும் நேபாளத்துக்கும் இடையிலான நட்பு ஒப்பந்தம் 100 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இதைக் கொண்டாடும் விதமாக நடிகை மனிஷா கொய்ராலா உள்பட 4 நேபாள பிரதிநிதிகள் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், நேபாளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மனிஷா கொய்ராலா இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
இதுதொடர்பாக மனிஷா வெளியிட்டுள்ள பதிவில், இங்கிலாந்து-நேபாள நாடுகள் இடையேயான 100 ஆண்டு நட்பைக் கொண்டாடும் விதமாக அந்நாட்டு பிரதமரை நேரில் சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. நட்பின் அடிப்படையில் அவரையும் அவரது குடும்பத்தையும் இமயமலை அடிவார கேம்ப்பிற்கு அழைத்திருக்கிறேன். அவருக்கு நான் நடித்த ஹீரமண்டி வெப் தொடர் பிடித்திருக்கிறது என்பது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் இந்தியன், ரஜினிகாந்தின் பாபா போன்ற படங்களில் நடித்துள்ள மனிஷா கொய்ராலா, புற்றுநோயில் இருந்து போராடி மீண்டவர். சமீபத்தில் இவர் நடித்திருந்த ஹீரமண்டி வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.