சிறையில் 260 பெண் கைதிகளுக்கு பாலியல் தொல்லை- ஐ.நா. அதிர்ச்சி தகவல்
- சிறை வன்முறை சம்பவத்தை பயன்படுத்திக்கொண்டு பெண்கள் சிறைகளுக்குள் புகுந்தவர்கள் பெண் கைதிளை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.
- பாதிக்கப்பட்ட பெண் கைதி ஒருவர், தன்னை ஒரே சமயத்தில் 12 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசின் மகாலா நகரில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. ஆண் கைதிகள் மட்டுமின்றி பெண் கைதிகளும் இந்த சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 3 ஆயிரம் பேர் அடைக்க வசதி உள்ள அந்த சிறையில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
அளவுக்கு அதிகமானோர் அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் அங்கே உள்ள கைதிகள் இடையே மோதல் போக்கு, பாலியல் அத்துமீறல்கள் ஆகியவை அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிறையில் வன்முறை ஏற்பட்டு கைதிகள் தப்பியோட முயன்றனர். இதனால் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 129 பேர் உயிரிழந்தனர். சிறை உடைப்பு முயற்சி குறித்து போலீசார் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சிறை வன்முறையின்போது பெண் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் ஆண் கைதிகள் அத்துமீறி நுழைந்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமான பெண் கைதிகள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
சிறை வன்முறை சம்பவத்தை பயன்படுத்திக்கொண்டு பெண்கள் சிறைகளுக்குள் புகுந்தவர்கள் பெண் கைதிளை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த 348 பெண்களில் 268 பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். அதில் 17 பேர் 18-க்கு வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் ஆவர்.
பாதிக்கப்பட்ட பெண் கைதி ஒருவர், தன்னை ஒரே சமயத்தில் 12 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்தான அதிர்ச்சி்கரமான அறிக்கையை ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ளது.
காங்கோவில் சிறை வன்முறையின்போது 260 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.