மொரோக்கா நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது
- நிலநடுக்கம் அந்நாட்டின் தெற்கில் உள்ள மராகேஷ் நகரை மையமாக கொண்டு உண்டானது.
- நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல்.
மொரோக்காவில் நேற்று இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவவரை 1037 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 1200 பேர் கயாமுற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நிலநடுக்கம் பற்றி வருத்தம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில் அதனை பகிர்ந்து கொண்டார். இது குறித்த பதிவில், "மொரோக்கா நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் வருத்தம் அடைந்துள்ளேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில், எனது நினைவுகள் முழுக்க பாதிக்கப்பட்ட மொரோக்கா மக்களுடனேயே உள்ளது. இதில் உயிரிழந்தோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமுற்றவர்கள் விரைந்து குணம் பெற வேண்டுகிறேன். இந்த கடினமான சூழ்நிலையில், மொரோக்காவுக்கு தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயார் நிலையில் உள்ளது," என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோ, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு அந்நாட்டின் நேரப்படி 11.11 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் அந்நாட்டின் தெற்கில் உள்ள மராகேஷ் நகரை மையமாக கொண்டு உண்டானது. நகரில் இருந்து தென்மேற்கே 71 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹைஅட்லஸ் மலைகளில் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
மொரோக்கோவின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம், நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது என்று தெரிவித்து இருக்கிறது. நிலநடுக்கம் சில நொடிகள் வரை நீடித்தது இருக்கிறது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கி இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் மக்கள் தூங்கி கொண்டிருந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலரால் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை.
இதனால் கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். அதே நேரத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அதன்பின் 19 நிமிடங்களுக்கு பிறகு 4.9 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.