உலகம்

கேன்சர் நோய் சிகிச்சையினால் ஏற்படும் வலியை நீக்க புது வழிமுறை

Published On 2024-02-22 08:56 GMT   |   Update On 2024-02-22 08:56 GMT
  • நோய்க்கான பல சிகிச்சை முறைகளிலும் நோயாளிகளுக்கு வலி குறைவதில்லை
  • வலியற்ற கேன்சர் சிகிச்சை முறைகள் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன

உலகெங்கும் உள்ள மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று, கேன்சர் (cancer) எனப்படும் புற்றுநோய்.

உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படக் கூடிய கேன்சர் நோய்க்கு, நவீன மருத்துவத்தில் பல சிகிச்சை முறைகளும், மாத்திரைகளும், மருந்துகளும் உள்ளதால் நோயை கட்டுக்குள் வைக்க முடிகிறது.

ஆனால், இத்தகைய சிகிச்சை முறைகளில் நோயாளிகளுக்கு வலி அதிகம் இருப்பது தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது.

கேன்சர் நோய் தீர்க்கும் வழிமுறைகள் மற்றும் வலியற்ற சிகிச்சை முறைகள் குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இங்கிலாந்தின் "கிழக்கு சஃபோல்க் மற்றும் வடக்கு எஸ்ஸெக்ஸ்" (East Suffolk and North Essex) பகுதியில் தேசிய சுகாதார சேவையின் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் (NHS Foundation Trust) எனும் லாப நோக்கமற்ற அமைப்பு கேன்சர் நோயாளிகளுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் கேன்சர் நோய்க்கான சிகிச்சை அளித்து வருகிறது.

இந்த அமைப்பை சார்ந்த மருத்துவர்கள் தங்கள் ஆய்வில் "லைட் தெரபி" (light therapy) எனப்படும் "ஓளி சிகிச்சை" மூலம் கழுத்து மற்றும் தலை (head and neck) கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி (மருந்து சிகிச்சை) மற்றும் ரேடியோதெரபி (கதிரியக்க சிகிச்சை) ஆகியவற்றின் பக்கவிளைவாக ஏற்படும் வலி, பெருமளவு குறைவதை கண்டுபிடித்துள்ளனர்.

பிற தெரபிகளின் பக்க விளைவாக வாய் பகுதியில் ஏற்படும் வலியை "லைட் தெரபி" குறைக்கிறது.

"ஃபோட்டோ பயோ மாடுலேஷன்" (Photo Bio Modulation) சிகிச்சை எனப்படும் பிபிஎம் (PBM) பெற்று கொண்ட நோயாளிகளுக்கு வலி நிவாரண மருந்துகள் தேவைப்படுவதில்லை என தெரிய வந்துள்ளது.

சீராக அகச்சிவப்பு ஓளியை (infrared light) வாய் பகுதியில் பாய்ச்சுவதன் மூலம் வாய் புண் மற்றும் வலி குறைந்துள்ளது.

"பிற சிகிச்சைகளினால் ஏற்பட்ட வாய் புண் குறையாமல் இருந்தது. அதன் காரணமாக திரவ உணவு மட்டுமே உட்கொள்ளும் நிலை இருந்து வந்தது. மேலும், நாவினால் எந்த சுவையையும் அறிய முடியவில்லை. ஆனால், பிபிஎம் சிகிச்சை நிம்மதியான அனுபவத்தை கொடுத்தது" என ஒரு நோயாளி தெரிவித்தார்.

வரும் மாதங்களில், பிபிஎம் சிகிச்சையின் பரவலான பயன்பாடு குறித்து மேலும் தகவல்கள் வெளிவரலாம்.

Tags:    

Similar News