உலகம்

பாலஸ்தீனியர்களை அரபு நாடுகள் அருகே கூட சேர்க்காதது ஏன்?: நிக்கி ஹாலே கேள்வி

Published On 2023-10-16 05:52 GMT   |   Update On 2023-10-16 07:09 GMT
  • அப்பாவி பாலஸ்தீன பொதுமக்களை ஏற்று கொள்ள பல அரபு நாடுகள் தயங்குகின்றன
  • கத்தார், லெபனான், ஜோர்டான், ஈரான், எகிப்து என்ன செய்கின்றன என நிக்கி கேட்டார்

கடந்த அக்டோபர் 7 அன்று, தனது நாட்டின் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல், பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக கூறி பாலஸ்தீனம் முழுவதும் அவர்களை தேடி பழி வாங்கி வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரின் போர் 10-வது நாளாக தீவிரமடைந்து வரும் நிலையில், காசா பகுதியில் உள்ள பொதுமக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ஏற்கனெவே அறிவித்திருந்தது.

ஆனால், அப்பாவி பாலஸ்தீன பொதுமக்களை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க பல அரபு நாடுகள் தயங்குகின்றன.

அடுத்த வருடம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் நிக்கி ஹாலே, அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பி, தனக்கு ஆதரவை தேடி பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து அவர் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கருத்து தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை குறித்து நாம் கவனம் கொள்ள வேண்டும். ஆனால் தனது நாட்டை விட்டு ஓடி செல்லும் சூழலில் பரிதாபமாக உள்ள காசா பொதுமக்களுக்கு, அரபு நாடுகள் தங்கள் நாட்டின் கதவுகளை திறந்து அவர்களை உள்ளே அனுமதிக்க ஏன் தயங்குகின்றன? அரபு நாடுகள் என்ன செய்கின்றன? கத்தார், லெபனான், ஜோர்டான், ஈரான், எகிப்து ஆகிய நாடுகள் ஏன் அந்த அப்பாவி பொதுமக்களை தங்கள் நாட்டிற்குள் அனுமதித்து பாதுகாப்பு அளிக்க மறுக்கின்றன?

எகிப்திற்கு ஒவ்வொரு வருடமும் $1 பில்லியனுக்கும் மேல் அமெரிக்கா வழங்கி வருகிறது. அப்படியிருந்தும் பாலஸ்தீனர்களை ஏன் அவர்கள் தங்கள் நாட்டு மக்களோடு மக்களாக வாழ அனுமதிக்க மறுக்கிறார்கள்? பாலஸ்தீன மக்களை தங்கள் அருகாமையில் வைத்து கொள்ள அந்த நாடுகளே விரும்பவில்லை. அவ்வாறு இருக்கும் போது இஸ்ரேல் எப்படி தங்கள் அருகாமையில் தங்க வைத்து கொள்ள விரும்பும்? நாம் இந்த பிரச்சனையை நேர்மையான பார்வையுடன் அணுக வேண்டும். பாலஸ்தீனர்களின் நலனுக்காக அரபு நாடுகள் எதுவும் செய்யவில்லை என்பதே உண்மை.

ஹமாஸ் அமைப்பினர் தற்போது செய்து வருவதை நிறுத்த சொல்லி உடனே தடுக்க அரபு நாடுகளால் முடியும்; ஆனால் அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.

இறுதியாக அவர்கள் இஸ்ரேலையும் அமெரிக்காவையும்தான் குறை சொல்வார்கள்.

இவ்வாறு நிக்கி ஹாலே கூறினார்.

Tags:    

Similar News