உலகம்

அடித்து கொள்ளும் குடியரசு கட்சி வேட்பாளர்கள்

Published On 2023-11-09 07:18 GMT   |   Update On 2023-11-09 07:18 GMT
  • டிக்டாக் செயலியில் இணைந்து விட்டதாக விவேக் செப்டம்பரில் கூறியிருந்தார்
  • அவரது மகளே இதை பயன்படுத்துகிறார் என விவேக் பதில் கூறினார்

அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

இரு கட்சி ஜனநாயக முறை உள்ள அமெரிக்காவில், குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த இரு வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து களம் இறங்குவார்கள். தற்போது அங்கு ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராக உள்ளார்.

வரவிருக்கும் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் எவரை முன்னிறுத்துவது என அக்கட்சியினர் முடிவு செய்ய, போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பங்கு பெறும் பல விவாத நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுவது வழக்கம். அவற்றில் பங்கு பெறும் ஓவ்வொருவரும் அமெரிக்காவின் முன் உள்ள சவால்களையும், அதனை எதிர்கொள்ள அவர்கள் வசம் உள்ள திட்டங்கள் குறித்தும், தங்கள் கருத்துக்களை விரிவாக விளக்குவார்கள். இந்த விவாதத்திற்கு பிறகு கட்சியில் ஒரு இறுதி முடிவு எட்டப்படும். அதன் பின் ஒருமனதாக ஜனநாயக கட்சிக்கு எதிராக அந்த வேட்பாளர் களம் நிறுத்தப்படுவார்.

தற்போதைய நிலவரப்படி முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி களமிறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதுவரை குடியரசு கட்சியின் வேட்பாளர்கள் பங்கு பெறும் விவாத நிகழ்ச்சிகள் 2 நடந்து முடிந்து விட்டன. தற்போது மூன்றாவதாக அமெரிக்காவின் மியாமி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சந்திப்பு நேற்று நடந்தது.

இதில் விவேக் ராமசாமி, நிக்கி ஹேலி, ரான் டிசான்டிஸ், கிரிஸ் கிரிஸ்டீ, டிம் ஸ்காட் ஆகிய வேட்பாளர்கள் பங்கு பெற்றனர்.

விவேக் ராமசாமி, கடந்த செப்டம்பர் மாதம், சீன நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance) உருவாக்கிய பிரபல டிக்டாக் (TikTok) எனும் செயலியை பயன்படுத்த அதில் கணக்கு தொடங்கி உள்ளதாகவும், இதன் மூலம் இள வயது வாக்காளர்களுக்கு தனது கருத்துக்கள் எளிதாக சென்றடையும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.

ஆனால், சீன மென்பொருள் செயலிகளில் உள்ள பயனர் தகவல்களை சீனா களவாடி, தவறாக பயன்படுத்துவதாக ஒரு பிரச்சாரம் அமெரிக்காவில் பரவி வருகிறது. இச்செயலியை தடை செய்யவும் அங்கு பலர் அரசுக்கு கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், விவேக் இந்த செயலியை பயன்படுத்தி வருவது குறித்து நிக்கி ஹேலி விமர்சித்திருந்தார்.

நேற்றைய சந்திப்பில் இது குறித்த விவாதம் நடைபெற்றது.

அப்போது பதிலளித்த விவேக், "நான் டிக்டாக் செயலியை பயன்படுத்துவதை கடந்த விவாதத்தின் போது நிக்கி கேலி செய்தார். ஆனால், அவரது மகளே அந்த செயலியை நீண்ட காலமாக பயன்படுத்தி வருவது உண்மை. எனவே நிக்கி அவர்களே, முதலில் குடும்பத்தை சரி செய்ய பாருங்கள்" என கூறினார்.

அப்போது இடைமறித்த நிக்கி, "என் மகளை விவாதத்தில் இழுக்காதீர்கள். நீங்கள் ஒரு கழிவு" என கடுமையாக கூறினார்.

இதனை கேட்ட பார்வையாளர்கள் கை தட்டி இக்கருத்தை வரவேற்றனர்.

அதற்கு மீண்டும் பதிலளித்த விவேக், "அடுத்த தலைமுறையினர் இதனை பயன்படுத்துகின்றனர் என்பதனையே நான் குறிப்பிட்டேன்" என பதிலளித்தார்.

மேற்கத்திய நாடுகளில் நடைபெறும் விவாதங்கள் மேடை நாகரிகத்திற்கு ஏற்ப கண்ணியமான முறையில் நடைபெறுவது வழக்கம். ஆனால், அங்கும் சமீப காலமாக தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள் வைப்பதும், ஒருவரையொருவர் கடும் சொற்களால் தாக்கி கொள்வதும் அரசியல் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

Similar News