உலகம்

உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி - வடகொரியா அறிவிப்பு

Published On 2023-05-31 01:15 GMT   |   Update On 2023-05-31 01:15 GMT
  • இரண்டாம் கட்ட நிலைகளில் பிரச்சினைகளை எதிர்கொண்ட ராக்கெட் நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடலில் விழுந்தது.
  • சியோலில், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டது.

நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக வடகொரியா அறிவித்து இருக்கிறது. இது குறித்த தகவல்கள் கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

அதில், உளவு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிலைகளில் பிரச்சினைகளை எதிர்கொண்டு நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் விழுந்தது.

வடகொரியா தனது முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதால், ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

வடகொரிய நாட்டின் வடமேற்கு பகுதியான டாங்சாங்-ரி-யில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் ஏவப்படுவதை அடுத்து தென் கொரிய தலைநகர் சியோலில், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், எதிர்பார்த்த சேதம் ஏற்படாததால், எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

முன்னதாக வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் ஏவப்படும் தகவலுக்கு பதிலடி கொடுத்த ஜப்பான், தனது எல்லைக்குள் ராக்கெட் வந்தால் அதனை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தது.

நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்து இருக்கிறது. இந்த தடையை மீறியே வடகொரியா தனது உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவ முயற்சி செய்து இருக்கிறது.

Tags:    

Similar News