உலகம்

பெண்கள் வேலை நிறுத்தம் - தானும் இணைந்த பெண் பிரதமர்

Published On 2023-10-25 10:23 GMT   |   Update On 2023-10-25 10:23 GMT
  • மக்கள் தொகையில் 4 லட்சம் பேர் மட்டுமே கொண்டது ஐஸ்லேண்டு
  • அனைத்து பணிகளும் வேலைநிறுத்தத்தால் முடங்கி போனது

வட அட்லான்டிக் பகுதியில் உள்ள வட ஐரோப்பிய நாடு, ஐஸ்லேண்டு (Iceland). இதன் தலைநகர் ரெக்ஜேவிக் (Reykjavik). "லேண்ட் ஆஃப் ஃபையர் அண்ட் ஐஸ்" (land of fire and ice) என அழைக்கப்படும் இந்நாடு, சுமார் 4 லட்சம் பேரை கொண்ட தனித்தீவு நாடாகும்.

எரிமலை, பனிப்பாறைகள் என இயற்கை அழகுக்காக புகழ் பெற்ற சுற்றுலா தலமான ஐஸ்லேண்டில் ஆண்கள் பெறும் ஊதியத்தை விட 21 சதவீதம் குறைவாகவே பெண்கள் ஊதியம் பெறுகின்றனர். சுகாதார பணிகள், தூய்மை பணிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட பல பணிகளில் பெண்களுக்கு ஊதியம் இன்னும் குறைவாக உள்ளது. 1975லிருந்து இது குறித்து 7 முறை போராட்டங்கள் நடத்தியும் அரசாங்கம் இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் அந்நாட்டில் பெண்கள் அமைப்பினர் மீண்டும் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதை தொடர்ந்து நேற்று, இந்நாட்டின் தலைநகரில் உள்ள அர்னார்ஹால் (Arnarholl) மலை மற்றும் பல முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தின் விளைவாக பெண்கள் ஈடுபட்டு வந்த பள்ளிக்கூடங்கள், கடைகள், வங்கிகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட பல பணிகள் அந்நாட்டில் ஸ்தம்பித்து விட்டன.

இப்போராட்டத்திற்கு அந்நாட்டின் பெண் பிரதமர் கேத்ரின் ஜேகப்ஸ்டாட்டிர் (Katrin Jakobsdottir) ஆதரவு தெரிவித்து, பணிக்கு செல்லாமல் தனது வீட்டிலேயே இருந்து கொண்டு வேலை நிறுத்தம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News