கத்தார் பிரதமர், நிதியமைச்சரை சந்தித்தார் பிரதமர் மோடி - இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை
- பிரதமர் மோடி அபுதாபியின் முதல் இந்து கோவிலை திறந்து வைத்தார்.
- பிரதமர் மோடி அதிபர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானியை சந்தித்தார்.
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நேற்று அபுதாபியின் முதல் இந்து கோவிலை திறந்து வைத்த பிரதமர் மோடி அங்கிருந்து கத்தார் தலைநகர் தோஹா சென்றடைந்தார்.
கத்தார் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி மற்றும் ஷேக் தமிம் பின் அல் தானி இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்த எக்ஸ் பதிவில் பிரதமர் மோடி, "பிரதமர் ஷேக் தமிம் பின் அல் தானியுடன் சிறப்பான சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் போது இந்தியா மற்றும் கத்தார் இடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
"இந்தியா-கத்தார் உறவை மேம்படுத்தும் விதமாக கத்தார் பிரதமர் ஷேக் தமிம் பின் அல்தானி மற்றும் கத்தாரின் நிதி அமைச்சரை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சந்திப்பின் போது வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, நிதி என பல்வேறு துறைகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது," என மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.