பிரிஸ்பேன் இந்திய சமூகத்தினரின் நீண்ட கால கோரிக்கை... பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு
- சிட்னியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
- நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பங்கேற்றார்.
இந்திய பிரதமர் மோடி, ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். சிட்னி நகருக்கு சென்றடைந்த மோடிக்கு ஆஸ்திரேலிய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மோடிக்கு ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி இன்று ஆஸ்திரேலியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
சிட்னியின் கியுடாஸ் பேங்க் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, இந்திய சமூகத்தினரின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பிரிஸ்பேனில் புதிய இந்திய தூதரகம் விரைவில் திறக்கப்படும் என அறிவித்தார். நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பங்கேற்றார்.
தற்போது சிட்னி, மெல்போர்ன் மற்றும் பெர்த் ஆகிய நகரங்களில் இந்திய தூதரகங்கள் உள்ளன. பிரிஸ்பேனில் தற்போது இந்தியாவின் கெளரவ தூதரகம் உள்ளது.
ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் 2016 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஆஸ்திரேலியாவில் 619164 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இது ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 2.8 சதவீதம் ஆகும். அவர்களில் 592000 பேர் இந்தியாவில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.