உலகம்

ஐ.நா. தீர்மானம் தோல்வி எதிரொலி - நேதன்யாகு அதிரடி முடிவு

Published On 2023-12-10 05:16 GMT   |   Update On 2023-12-10 05:29 GMT
  • பாலஸ்தீனத்தில் சுமார் 17 ஆயிரம் பேர் போரினால் உயிரிழந்துள்ளனர்
  • எங்கள் போர் மிக நியாயமானதுதான் என நேதன்யாகு அறிவித்துள்ளார்

கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க போவதாக உறுதி எடுத்து பாலஸ்தீன காசா முனை பகுதி மீது இஸ்ரேல் தொடங்கிய போர் தற்போது 60 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக நடந்து வருகிறது.

இதுவரை 17,700 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 48,800 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன காசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐ.நா. சபையில் போர் இடைநிறுத்தத்தை வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா, தனது "வீடோ" எனும் சிறப்பு அதிகாரத்தை (Veto) பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது.

இப்பின்னணியில் தங்களின் நிலைப்பாடு குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, "அமெரிக்கா எடுத்துள்ள சரியான நிலைப்பாட்டை நான் பாராட்டுகிறேன். ஹமாஸ் அமைப்பை ஒழிக்க நாங்கள் நடத்தி வரும் போர் மிக நியாயமானதுதான். அது மேலும் தொடரும்" என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹென் (Eli Cohen), "மனித இனத்திற்கு எதிரான குற்றங்களையும், போர் குற்றங்களையும் நடத்தும் ஹமாஸ் அமைப்பினர், போர் இடைநிறுத்தம் ஏற்பட்டால் மீண்டும் காசா முனை பகுதியில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி விடுவார்கள்" என கூறினார்.

இஸ்ரேலின் ராணுவ தலைவர் ஹெர்சி ஹலேவி (Herzi Halevi) தங்கள் தாக்குதலில் இன்னமும் அழுத்தம் காட்டப்படும் என எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், காசாவில் 36 சதவீத வீடுகளில் உணவு பற்றாக்குறை நெருக்கடியாக மாறியுள்ளது என்றும் காசா முனை பகுதியில் பாதுகாப்பான இடம் என ஏதுமில்லை என்றும் காசா பகுதியின் சுகாதார துறை அறிவித்துள்ளது.

Tags:    

Similar News