உலகம்

தாக்குதல் நடத்தினால் பரஸ்பர உதவி: புதிய ஒப்பந்தம் குறித்து புதின் தகவல்

Published On 2024-06-19 11:56 GMT   |   Update On 2024-06-19 11:56 GMT
  • 24 வருடத்திற்குப் பிறகு ரஷிய அதிபர் புதின் வடகொரியா வந்துள்ளார்.
  • ரஷிய அதிபர் புதினை கிம் ஜாங் உன் கட்டித் தழுவி வரவேற்றார்.

ரஷிய அதிபர் புதின் சுமார் 24 வருடத்திற்குப் பிறகு வடகொரியா சென்றுள்ளார். உக்ரைனுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக கடும் பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன. இதனால் வடகொரியாவின் உதவி ரஷியாவுக்கு தேவைப்படுகிறது. இதனால் வடகொரியாவுடனான நட்பை மேலும் வலுப்படுத்தி வருகிறது.

கடந்த வருடம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடன் ரஷியா சென்றிருந்தார். அப்போது ஆயுத கிடங்குகள், ஆயுத தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார்.

இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் இரண்டு நாட்கள் பயணமாக வடகொரியா வந்துள்ளார். அவரை சிவப்பு கம்பளம் மரியாதையுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கட்டித்தழுவி வரவேற்றார்.

இரு நாடுகளுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் ஏற்பட்டதாகவும், அந்த ஒப்பந்தத்தில் புதின் மற்றும் கிம் ஜாங் உன் கையெழுத்திட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த ஒப்பந்தத்தில் மற்ற நாடுகள் ரஷியா அல்லது வடகொரியா மீது தாக்குதல் நடத்தினால் பரஸ்பர உதவிகள் செய்வது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது என புதின் தெரிவித்துள்ளார்.

ஆனால் எந்த மாதிரியான உதவி என புதின் குறிப்பிடவில்லை. ஆனால் விரிவான மூலோபாய கூட்டாண்மை உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையின்போது பாதுகாப்பு மற்றும் சர்வதேச பிரச்சனை ஆகியவை பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தது என புதின் கூறியதாக ரஷியா மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ராணுவ- தொழில்நுட்ப ஒத்துழைப்பு இந்த ஒப்பந்தத்தின் கீழ் வராது என புதின் புறந்தள்ளிவிடவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இருவருடைய பேச்சுவார்த்தை குறித்து கிம் ஜாங் உன் கூறுகையில் "ஒப்பந்தம் அமைதி மற்றும் பாதுகாப்பு சார்புடையது. இது ஒரு புதிய பன்முனை உலகத்தை உருவாக்குவதற்கான உந்து சக்தியாக மாறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரம், மருத்து கல்வி, அறிவியல் தொடர்பான ஒத்துழைப்பு தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்ததானதாக ரஷியா மீடியாக்கள் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News