உலகம்

கைவிரித்தது 'கத்தார்'.. இஸ்ரேல்- ஹமாஸ் அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து விலகல் - ஏன் தெரியுமா?

Published On 2024-11-10 13:06 GMT   |   Update On 2024-11-10 13:06 GMT
  • காசாவில் உயிரிழந்த 43,552 பேரில் 70 சதவீதம் [30,450 பேர்] பேர் பெண்கள் குழந்தைகள் என்று ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய எந்த தரப்பினரும் விரும்பவில்லை

அக்டோபர் 7 தாக்குதல் 

கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடி வரும் கிளர்ச்சி அமைப்பான ஹமாஸ் அந்நாட்டுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் 250 பேர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.

பழிக்குப் பழி 

இந்த அடியை எதிர்பார்த்திராத இஸ்ரேல் பழிக்குப் பழி வாங்க பாலஸ்தீன நகரங்களின் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அவ்வாறு தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல்கள் கடந்த 13 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை 43 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்த 43,552 பேரில் 70 சதவீதம் [30,450 பேர்] பேர் பெண்கள் குழந்தைகள் என்று ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

ஹிஸ்புல்லா லெபனான் 

இதற்கிடையே ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைப்பதாக லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல்களில் 2500 லெபனானியர்கள் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் தலைநகர் பெய்ரூட் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை துறந்து இடம்பெயர்ந்து வருகின்றனர். அண்டை நாடான சிரியாவுக்கு எல்லை வழியாக லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.

ஈரான் சூழல்  

இதுதவிர்த்து ஈரான் - இஸ்ரேல் மோதலும் முற்றியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி நடத்திய வான்வழித் தாக்குதலால் நிலைமை மோசமானது. இதற்கு பதிலடியாக ஈரான் நிலைகள் மீது இஸ்ரேலும் தாக்கியது. அடுத்ததாக ஈரான் அணு ஆயுத தளங்கள் மற்றும் எண்ணெய்க் கிணறுகளை இஸ்ரேல் தாக்கினால் பதற்றம் அதிகரிக்கும். போரை நிறுத்த ஐநா மேற்கொண்ட முயற்சிகள் அமைத்தும் பலனளிக்காமல் போயின. பதிலாக ஐநா பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டார்.

கைவிரித்த கத்தார் 

இந்த சூழலில் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்த பிணை கைதி பரிமாற்ற அமைதி பேச்சுவார்த்தை அமெரிக்கா, எகிப்து முன்னெடுப்பில் கத்தார் நாட்டில் வைத்து நடந்து வந்தது. ஆனாலும் இஸ்ரேல் , மற்றும் ஹமாஸ் பிடி கொடுப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையில்தான் இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகளிலிருந்து முழுமையாக விலகுவதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய எந்த தரப்பினரும் விரும்பவில்லை என விரக்தி தெரிவித்து கத்தார் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஹமாஸ் அதிகம் கத்தாரில் உலாவுவதும், தோஹா நகரில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் கட்டடம் இருப்பதும் அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. சமீபத்தில் முன்மொழியப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்காததால் அவர்களை கத்தாரில் இருந்து வேலையற்ற அமெரிக்க அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இடது - அமெரிக்க வெளியுறவு செயலாளர் - கத்தார் தலைவர் - வலது

 

உறவு

 எனவே ஹமாஸ் அலுவலகத்தை அடுத்த 10 நாட்களில் மூட கத்தார் உத்தரவிட்டதாகவும் செய்திகள் பரவின. ஆனால் கத்தார் வெளியுறவுத்துறை அதனை மறுத்து எதற்கு வம்பு என்று அமைதி பேச்சுவார்த்தையிலிருந்தே மொத்தமாக விளங்கியுள்ளது.

தற்போதைய நிலைமைக்கு இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அனைத்து தரப்பினரும் தங்கள் விருப்பத்தையும் தீவிரத்தையும் காட்டினால் மட்டுமே தங்கள் முயற்சியை மீண்டும் தொடர்வோம் என்று கத்தார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு கொண்ட நாடாக இருந்த கத்தார் பேச்சுவார்த்தைக்கு ஏற்றதாக இருந்த நிலையில் கத்தார் தற்போது கை விரித்துள்ளதால் அமைதிப் பேச்சுவார்த்தையில் மேலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.  கத்தார் இடத்தில் அடுத்ததாக துருக்கி அமைதி பேச்சுவார்த்தை இடமாக அமையலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர் . அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர் கத்தாரின் இந்த முடிவு வெளிவந்துள்ளதையும் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டி உள்ளது.

Tags:    

Similar News