உலகம்

சிறுமிகள் பலாத்காரம்.. பெண் கடத்தல் வியாபாரம் - 'கடவுளால் நியமிக்கப்பட்ட மகன்' சிக்கியது எப்படி?

Published On 2024-09-09 13:21 GMT   |   Update On 2024-09-09 13:21 GMT
  • பிலிப்பைன்ஸில் இந்த பாதிரியரை பல லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
  • போலி பாதிரியாரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டேவின் நீண்டகால நண்பர் அப்போலோ குயிபோலொய் என்ற போலி பாதிரியார், பாலியல் குற்றச்சாட்டு மற்றும் ஆள் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் சிக்கினார். இதைத் தொடர்ந்து எஃப்பிஐ-இன் அதிகம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இவர் மீது அமெரிக்க நீதித்துறை கடந்த 2021 ஆம் ஆண்டு 12 முதல் 25 வயதுடைய சிறுமிகள் மற்றும் பெண்களை தன்னுடன் கட்டாய பாலியல் உறவு வைத்துக் கொள்ள செய்ததாக குற்றம்சாட்டியது. மேலும் இவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம், அமெரிக்க தேவலயங்களுக்கு மக்களை சட்டவிரோத விசாக்கள் மூலம் அழைத்து வந்தது போன்ற குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.

இவ்வாறு சட்டவிரோதமாக அமெரிக்கா அழைத்து வரப்பட்டவர்களை கொண்டு தொண்டுபணிகள் மற்றும் தேவாலய நிர்வாகத்திற்காக நிதி திரட்ட வைத்தது, அந்த பணத்தை கொண்டு ஆடம்பர வாழ்க்கையை நடத்தி வந்தது போன்ற குற்றங்களில் அப்போலோ பாதிரியர் ஈடுபட்டு வந்துள்ளார். பிலிப்பைன்ஸில் இந்த பாதிரியரை பல லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

தன்னை பிரபஞ்சத்தின் உரிமையாளர் என்றும், கடவுளால் நியமிக்கப்பட்ட மகன் என்றும் கூறிக் கொள்ளும் அப்போலோ பாதிரியார் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) கைது செய்யப்பட்டார். இவரை கைது செய்ய 2 ஆயிரம் காவலர்கள், ஹெலிகாப்டர் மற்றும் தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு உள்ளன.

74 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தில் போலீசார் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நடத்திய தேடுதல் வேட்டையில், போலி பாதிரியாரை போலீசார் கண்டுபிடித்தனர். அத்தனை பிரபலமாக இருந்த போதிலும், போலீஸ் தேடலுக்கு அஞ்சி பங்கர் ஒன்றில் மறைந்திருந்த போலி பாதிரியாரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News