மின்சார கார்கள் உற்பத்தியில் திடீர் வேகத்தடை ஏன்?
- பெட்ரோல் வாகன விற்பனை சீரடைந்தாலும் மின்சார வாகன விற்பனை குறைந்துள்ளது
- வாகன விலையை குறைப்பதை தீவிரமாக உற்பத்தியாளர்கள் பரிசீலித்து வருகின்றனர்
சுற்றுச்சூழல் மாசுபடுதலை முழுவதுமாக குறைக்க, படிம எரிபொருளுக்கு பதிலாக மின்சக்தியை பயன்படுத்தும் வாகனங்களை தயாரிப்பதில் உலகெங்கும் உள்ள வாகன உற்பத்தியாளர்கள் தீவிரமாக முனைந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அமெரிக்காவில் மின்சார கார்கள் உற்பத்தி அதிகரித்து வந்தது.
ஆனால், கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் மின்சார வாகன உற்பத்தியாளர்கள், தங்கள் உற்பத்திக்கான இலக்கை குறைத்துள்ளது மட்டுமின்றி தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பெரும் முதலீட்டு திட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு உலக பொருளாதாரம் மெல்ல சரிவிலிருந்து மீண்டு வருகிறது. படிம எரிபொருள் வாகன விற்பனை சீரடைந்துள்ள நிலையில், மின்சார வாகன விற்பனை மட்டும் எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை.
புதுப்புது வாகனங்கள் சந்தையில் வந்தாலும், ஒரு முறை "சார்ஜ்" செய்தால் மின்சார கார்கள் பயணிக்கும் தூரமான "ரேஞ்ச்", எதிர்பார்த்த அளவில் அதிகரிக்கவில்லை.
அமெரிக்கா முழுவதும் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் உற்பத்தியாளர்களால் நிர்ணயித்த இலக்கை எட்ட முடியவில்லை. இது மின்சார வாகனங்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இல்லை என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பரப்பளவில் பெரிய நாடான அமெரிக்காவில் பொது போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு.
அமெரிக்கர்கள், தங்கள் அன்றாட அலுவல்களுக்கும், விடுமுறை நாள் பயணங்களுக்கும், நீண்டதூர பயணத்திற்கும் கார்களையே அதிகம் நம்பி உள்ளனர். ஆனால், பெட்ரோல் நிரப்பும் நிலையங்களை போல் மின்சக்தியை ரீசார்ஜ் செய்யும் வசதிக்கான கட்டமைப்பு அமெரிக்காவில் அதிகம் இல்லாததை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டுள்ளதால் மின்சார கார்களுக்கு மாற தயங்குகின்றனர்.
இதனால், தங்களிடம் ஏற்கெனவே அதிகமாக குவிந்திருக்கும் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை முதலில் விற்று விடுவதில் உற்பத்தியாளர்கள் கவனம் செலுத்தி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், வாகனங்களுக்கான விலையை குறைக்க டெஸ்லா, ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட பல மின்சார கார் உற்பத்தியாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
இந்தியாவில், மின்சார வாகனங்களில் கார்களை விட இரு சக்கர வாகனங்களே அதிகளவில் விற்பனையாவதாலும், இங்கும் சார்ஜிங் கட்டமைப்பு வசதிகள் எதிர்பார்த்த அளவு அதிகரிக்காததால், அமெரிக்காவில் தோன்றியுள்ள சிக்கல் இங்கும் வர கூடும் என வாகனத்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.