பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? கருத்துக் கணிப்பில் ரிஷி சுனக் முன்னிலை
- ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
- முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
லண்டன்:
பிரிட்டனில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக, பிரதமர் லிஸ் டிரஸ் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். என்னை தேர்வு செய்ததற்கான இலக்கை அடைய முடியாததால் ராஜினாமா செய்கிறேன் என லிஸ் டிரஸ் கூறியிருக்கிறார். பதவியேற்ற 45 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்ததால், இங்கிலாந்தின் வரலாற்றில் மிகக்குறுகிய காலம் பதவியில் இருந்த பிரதமர் என்ற பெயரை லிஸ் டிரஸ் பெற்றுள்ளார். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் தற்போது அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஜெரேமி ஹண்ட், தான் தேர்தலில் போடியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்வதற்கு முன்பு YouGov எனும் அமைப்பு கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. அப்போது தற்போதைய நிலையில் பிரதமராக யாருக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என கன்சர்வேட்டிவ் கட்சியினரிடம் கேட்டனர். லிஸ் ட்ரஸ் மற்றும் ரிஷி சுனக் ஆகியோரை அடிப்படையாக கொண்டு கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு கருத்து தெரிவித்தவர்களில் 55 சதவீதம் பேர் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு தெரிவித்தனர். 25 சதவீதம் பேர் மட்டும் லிஸ் ட்ரசுக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் பிரிட்டனின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ரிஷி சுனக்கிற்கு உள்ளதாக அந்த கருத்து கணிப்பு தெரிவித்தது.
அதே சமயம் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இவர்கள் தவிர கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த பென்னி மார்டண்ட், பாதுகாப்புத்துறை செயலாளர் பென் வாலஸ் ஆகியோரும் பிரதமர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது. எனவே வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகே, வெற்றி வாய்ப்புகளை கணிக்கும் சாத்தியங்கள் ஏற்படும்.
இருப்பினும் இந்த தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி பெற்றால், பிரிட்டனின் பிரதமராக பதவியேற்கும் முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமையை அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.