ரஷியாவில் உக்ரைன் சரமாரி குண்டு வீச்சு: 5 பேர் பலி
- ரஷியாவின் பெல்கோரோட் நகர் மீது உக்ரைன் ராணுவம் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கியது.
- தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் பெரிய அளவில் பொருள் சேதங்கள் ஏற்பட்டதாக பெல்கோரோட் பிராந்திய கவர்னர் தெரிவித்தார்.
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 2½ ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இரு தரப்பும் அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வராமல் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
குறிப்பாக ரஷியா மீதான தாக்குதலை உக்ரைன் அண்மை காலமாக தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷிய தலைநகர் மாஸ்கோவின் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் நடத்தியது.
இந்த நிலையில் உக்ரைன் எல்லையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ரஷியாவின் பெல்கோரோட் நகர் மீது உக்ரைன் ராணுவம் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கியது.
பெல்கோரோட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் பெரிய அளவில் பொருள் சேதங்கள் ஏற்பட்டதாக பெல்கோரோட் பிராந்திய கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்தார்.
இதுப்பற்றி அவர் கூறுகையில், "உக்ரைனின் குண்டு வீச்சில் ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 6 சிறுவர்கள் உள்பட 37 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என்றார்.