பாக்டீரியா தொற்று அபாயம் - உணவு பொருட்களை திரும்ப பெறும் பெப்சிகோ
- சாக்லேட் பார் மற்றும் ஓட்ஸ் வகை உணவு பொருட்களை குவேகர் விற்பனை செய்கிறது
- அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை ஆய்வில் புகார் உறுதியாகவில்லை
அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு நிறுவனம், பெப்சிகோ (PepsiCo).
பல உலக நாடுகளில், பல வகையான குளிர்பானங்கள் மற்றும் உடனடியாக உண்ண கூடிய உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனம், பெப்சிகோ.
பெப்சிகோவின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம், குவேகர் ஓட்ஸ் கம்பெனி (Quaker Oats Company).
தானியங்களில் சக்தி நிறைந்த ஒன்றாக கருதப்படும் ஓட்ஸ் தானியத்தை விற்பதில் குவேகர் முன்னணி வகிக்கிறது.
குவேகர், சக்தியூட்டும் சாக்லேட் பார் வகை உணவு மற்றும் ஓட்ஸ் வகைகளை தயாரித்து விற்பனை செய்கிறது.
சுமார் 24 பேருக்கு இவற்றை உண்டதால் உடல்நல குறைவுக்கான அறிகுறிகள் தென்பட்டதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பிற்கு (FDA) புகார்கள் வந்தன. சால்மொனெல்லா (Salmonella) எனும் பாக்டீரியா தொற்று குவேகர் தயாரிப்புகளில் இருப்பதாக புகார் எழுந்தது.
இவ்வகை பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்றினால் காய்ச்சல், குமட்டல், வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகளை ஏற்படுத்த கூடிய அபாயம் உள்ளது.
ஆனால், FDA அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இதுவரை குவேகர் தயாரிப்புகளுக்கும் உடல்நிலை கோளாறுகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக உறுதியாகவில்லை.
இருந்தும், தாங்கள் விற்பனை செய்த புகாருக்கு உள்ளான பொருட்களை அமெரிக்கா மற்றும் கனடா சந்தையிலிருந்து குவேகர் ஓட்ஸ் நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது.
அமெரிக்காவிலும், கனடாவிலும் இந்நிறுவனம் விற்பனை செய்த குவேகர் கிரானோலா பார், கேப்'ன் கிரன்ச் பார், கமேசா மரியாஸ் சீரியல், கேடோரேட் பீநட் பட்டர் சாக்லேட் புரோட்டீன் பார், மன்சீஸ் மன்ச் மிக்ஸ் உள்ளிட்ட பல உணவு தயாரிப்புகள் இவற்றில் அடங்கும்.
மேலும், இவற்றை முன்னர் வாங்கி வீட்டில் பயன்படுத்தாமல் வைத்திருப்பவர்கள் அவற்றை தூக்கி எறிந்து விட வேண்டும் எனவும் அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.