உலகம்

கிரீஸ் நாட்டில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு அனுமதி

Published On 2024-02-16 10:08 GMT   |   Update On 2024-02-16 10:08 GMT
  • தாங்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
  • மசோதா நிறைவேற்றப்பட்டதால் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏதென்ஸ்:

உலகம் முழுவதும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அவர்கள் தாங்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும், தங்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான நாடுகள் இதனை சட்டப்பூர்வமாக அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் கிரீஸ் நாட்டில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு 176 உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த சட்டத்தின் மூலம் ஒரே பாலினத்தை சேர்ந்த ஜோடியினர் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை தத்தெடுக்கவும் உரிமை வழங்கப்படுகிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏதென்ஸ் நகர வீதிகளில் அவர்கள் ஆடிப்பாடி கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஒருவருக்கொருவர் இனிப்புகளை கொடுத்து மகிழ்ந்தனர். இது தொடர்பாக தன்பாலின ஈர்ப்பாளர்கள் அமைப்பின் தலைவர் ஸ்டெல்லா பெலியா கூறும் போது, "இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம் ஆகும்" என்று தெரிவித்தார்.

இந்த திருமணத்துக்கு ஆர்த்த டாக்ஸ் கிறிஸ்தவ நாடுகளில் ஒன்றான கிரீஸ் முதன் முதலாக ஒப்புதல் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News