உலகம் (World)

வாரத்தில் 5 நாள் மட்டுமே பள்ளி, கல்லூரிகள் இயங்கும்: வங்காளதேச அரசு அறிவிப்பு

Published On 2022-08-23 02:37 GMT   |   Update On 2022-08-23 02:37 GMT
  • 24-ந்தேதி முதல் வங்கிகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும்.
  • மின்சாரத்தை மிச்சப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.

டாக்கா :

உலகின் பல நாடுகளை போல நம் அண்டை நாடான வங்காளதேசமும் தற்போது மின்சார பற்றாக்குறையால் திணறி வருகிறது.

இந்நிலையில் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, பள்ளி, கல்லூரிகளை வாரம் 5 நாட்கள் மட்டும் இயங்க செய்யவும், சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறை விடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடந்த மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பின் இம்முடிவை மந்திரிசபை செயலாளர் கண்டாகேர் அன்வருல் இஸ்லாம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எப்போதில் இருந்து இந்த முடிவை நடைமுறைக்கு கொண்டுவருவது என கல்வி அமைச்சகம் தீர்மானிக்கும் என்றார் அவர்.

மேலும், 24-ந்தேதி (நாளை) முதல் அனைத்து அரசு, தன்னாட்சி அலுவலகங்களும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செயல்படும். வங்கிகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும்.

மின்சார பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும்படி அனைத்து அலுவலகங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று அன்வருல் இஸ்லாம் கூறினார்.

மின்சாரத்தை மிச்சப்படுத்தும்விதமாக ஏற்கனவே, கடைகள், வணிக வளாகங்களை இரவு 8 மணிக்கு மூடிவிடும்படி வங்காளதேச அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News