கப்பல் விபத்து : பெரும் உயிர்ச்சேதம் தவிர்த்த இந்திய குழுவினருக்கு ஜோ பைடன் பாராட்டு
- கப்பலில் பணியாற்றிய இந்திய குழுவினர் உடனடியாக தகவல் தெரிவித்து உதவியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது
- கப்பலில் பணியாற்றிய இந்திய குழுவினருக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் படாப்ஸ்கோ நதியின் குறுக்கே உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது நேற்று அதிகாலை சரக்கு கப்பல் ஒன்று பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பாலம் உடைந்து தண்ணீரில் விழுந்தது. விபத்து நடந்த சமயத்தில் பாலத்தின் மீது சென்ற வாகனங்கள், பாலம் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் உள்ளிட்டோர் நீரில் மூழ்கினர்.
இந்தவிபத்தில் 6 பேர் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.நீரில் மூழ்கிய 6 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பாலத்தின் மீது மோதிய கப்பல் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது. சரக்கு கப்பலில் 22 இந்திய மாலுமிகள் பணியாற்றினர். சரக்கு கப்பல் பாலத்தின் மீது மோத உள்ளது குறித்து கப்பல் மாலுமிகள் முன்னதாக தகவல் தெரிவித்ததால் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது.மேலும் பெரிய அளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது.
அந்த கப்பலில் 4 ஆயிரத்து 679 கண்டெய்னர்கள் இருந்து உள்ளது. இலங்கையை நோக்கி அந்த கப்பல் சென்று கொண்டு இருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.
இந்த விபத்திற்கு இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்து உள்ளது. இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்து உள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது :-
கப்பல் கட்டுப்பாட்டை இழந்தது குறித்து போக்குவரத்து ஊழியர்களுக்கு கப்பல் பணியாளர்கள் முன்னரே எச்சரித்தனர். இதன் மூலம் பால்டிமோர் பாலத்தில் போக்குவரத்து மூடப்பட்டு பெரும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து அதிகாரிகளுக்கு கப்பலில் பணியாற்றிய இந்தியகுழுவினர் உடனடியாக தகவல் தெரிவித்து உதவியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளது. எனவே கப்பலில் பணியாற்றிய இந்திய குழுவினருக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு ஜோபைடன் கூறி உள்ளார்.