உலகம்

தொடர்ந்து குறையும் எக்ஸ் வருமானம்: முன்னிறுத்த போராடும் மஸ்க்

Published On 2023-10-05 08:16 GMT   |   Update On 2023-10-05 08:16 GMT
  • மஸ்க், 2022ல் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு டுவிட்டரை வாங்கினார்
  • மஸ்கின் அதிரடி நடவடிக்கைகளை கண்டு விளம்பர நிறுவனங்கள் தயங்குகின்றன

அமெரிக்காவில் 2006ல் தொடங்கப்பட்ட உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்று டுவிட்டர். பயனர்கள் ஒருவருக்கொருவர் உரையாட வழிவகுக்கும் வலைதளமான இதில், அவர்கள் தங்கள் கருத்துக்களை வார்த்தைகள், ஆடியோக்கள், வீடியோக்கள் மற்றும் கோப்புகள் என பல வடிவங்களில் பதிவிடலாம்.

உலகின் நம்பர் 1. கோடீசுவரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க், கடந்த 2022 அக்டோபர் மாதம், 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு டுவிட்டரை வாங்கினார். அந்நிறுவனத்தை முன்னிறுத்த பல அதிரடி முயற்சிகளை மேற்கொண்டு வரும் மஸ்க், அதன் பெயரை 'எக்ஸ்' என மாற்றினார்.

அவர் வாங்கியதில் இருந்து ஒவ்வொரு மாதமும் எக்ஸ் நிறுவனத்தின் வருமானம், மாதாமாதம் குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருடாந்திர வருமானம் ஆண்டுக்கு 55 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது. விளம்பர நிறுவனங்கள் மஸ்கின் அதிரடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை உணர்வுடன் சிந்திப்பதால் விளம்பரங்களை தர தயங்குகின்றனர் என தெரிகிறது.

அமெரிக்காவில் பெறப்படும் விளம்பர வருமானம், 2021 டிசம்பரில் இருந்ததை விட 2022 டிசம்பரில் 78% குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் வரை மொத்த விளம்பர வருமானம் ஆண்டுக்காண்டு 60 சதவீதம் குறைந்துள்ளது.

விளம்பர வருவாய் குறைந்து வருவதை ஓப்பு கொண்ட எலான் மஸ்க் ஒரு சில சமூக ஆர்வலர்கள் விளம்பர நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பதுதான் இதற்கு காரணம் என குற்றம் சாட்டினார்.

தற்போதைய தலைமை செயல் அதிகாரியான லிண்டா யாக்கரினோ எக்ஸ் நிறுவனத்தை விட்டு வெளியே சென்ற விளம்பர நிறுவனங்களில் 90 சதவீதம் பேர் மீண்டும் எக்ஸ் நிறுவனத்திற்கு திரும்பி விட்டதாகவும், அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து எக்ஸ் லாபம் ஈட்ட தொடங்கும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News