உலகம்

மஸ்கின் முயற்சிகள் தோல்வியா? பாதிக்கு மேல் குறைந்த சந்தை மதிப்பு

Published On 2023-10-31 07:01 GMT   |   Update On 2023-10-31 07:01 GMT
  • 2022ல் எலான் மஸ்க் $44 பில்லியனுக்கு விலைக்கு வாங்கினார்
  • மஸ்கின் அதிரடி நடவடிக்கைகளால் சந்தை மதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்பட்டது

இணையதள பயனர்களின் உரையாடல்களுக்கான பிரபல சமூக வலைதளம், அமெரிக்காவை மையமாக கொண்ட எக்ஸ் (முன்னர், டுவிட்டர்). இந்த வலைதளத்தில் பயனர்கள் தங்கள் கருத்துக்களை செய்தி, புகைப்படம், ஆடியோ, வீடியோ, கோப்பு உட்பட அனைத்து வடிவங்களிலும் பிற பயனர்களுடன் பரிமாறி கொள்ளலாம்.

2006ல் அமெரிக்காவில் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தை, கடந்த 2022 அக்டோபர் மாதம், உலகின் நம்பர் 1. கோடீசுவரரும், அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க், சுமார் ரூ.3 லட்சத்து 37 ஆயிரம் கோடிக்கு ($44 பில்லியன்) விலைக்கு வாங்கினார்.

எலான் மஸ்க், 'டுவிட்டர்' வலைதளத்தை விலைக்கு வாங்கியதிலிருந்து அதன் மதிப்பை உயர்த்த பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முன்னதாக அதன் தலைமை செயல் அதிகாரியை மாற்றினார். பிறகு அவர் பல ஊழியர்களை பணி நீக்கம் செய்தார்; ஒரு சிலர் அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் ராஜினாமா செய்தனர்.

தொடர்ந்து மஸ்க், வலைதளத்தின் பெயரை 'எக்ஸ்' என மாற்றினார். எக்ஸ் வலைதள உள்ளடக்கத்தை பயனர்கள் உபயோகப்படுத்த பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். பல இலவச சேவைகளை நிறுத்திய எலான் மஸ்க், சந்தா முறையில் சேவைகளை மாற்றியமைத்தார்.

இவரது செயல்முறைகளால் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எலான் மஸ்க் விலைக்கு வாங்கி 1 வருடம் கடந்த நிலையில், தற்போது அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 1 லட்சத்து 58 ஆயிரம் கோடி ($19 பில்லியன்) என குறைந்துள்ளது. இது அவர் விலைக்கு வாங்கிய விலையை விட பாதிக்கும் கீழே என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் நிறுவனமான எக்ஸை பங்குச்சந்தையில் பதிவு செய்யும் திட்டமிட்டிருந்தார் எலான் மஸ்க். ஆனால், தற்போது அதன் சந்தை மதிப்பு மிகவும் குறைந்திருப்பதால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News