ஆஸ்திரேலியா கத்திக்குத்து சம்பவம்: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி
- இந்திய வம்சாவளி தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.
- வணிக வளாகத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் இரங்கல் தெரிவித்தார்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வணிக வளாகத்தில் புகுந்த ஆண் ஒருவர் காட்டுமிராண்டித்தனமாக அங்கிருந்தவர்களை கத்தியால் குத்தினார். இதில் 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். பச்சிளம் குழந்தை உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் போலீஸ் அவரை பிடித்து சுட்டுக்கொன்றது. இதனிடையே கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவரின் அடையாளம் தெரியவந்துள்ளது.
அவருடைய பெயர் ஜோயல் காச்சி (40) என்பதும் குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்த அவர் மனநோய்க்காக சிகிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் இந்த சம்பவத்தில் எவ்வித பயங்கரவாத தாக்குதலோ, திட்டமிட்ட சதியோ கிடையாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட கொலையாளியை பெண் போலீஸ் அதிகாரி எமி ஸ்காட் சம்பவ இடத்தில் லாவகமாக மடக்கி பிடித்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமயோசிதமாக செயல்பட்டு பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்திய எமி ஸ்காட்டுக்கு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் இந்திய வம்சாவளி தம்பதியினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். சிட்னி நகரை சேர்ந்த டெபாஷிஸ் சக்ரபர்த்தி-ஷாய் கோஷல் தம்பதி சம்பவம் நடந்தபோது வணிக வளாகத்தில் இருந்துள்ளனர். தாக்குதலின்போது அங்குள்ள சேமிப்பு கிட்டங்கியில் மறைந்திருந்து தங்களுடைய உயிரை காப்பாற்றி கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் வணிக வளாகத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் இரங்கல் தெரிவித்தார். சம்பவம் நடந்த வணிக வளாக கட்டிடத்திற்கு நேரடியாக வந்த அவர், வணிக வளாகம் முகப்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.