உலகம்

இருமல் மருந்து விவகாரம்: நிலைமை கட்டுக்குள் உள்ளது- காம்பியா அரசு தகவல்

Published On 2022-10-08 04:25 GMT   |   Update On 2022-10-08 10:12 GMT
  • இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் இதற்கான விசாரணையில் இறங்கி உள்ளனர்.
  • இந்திய இருமல் சிரப் மருந்துகளின் பயன்பாடு கட்டுப்பாட்டில் இருப்பதால் மேலும் உயிரிழப்பு இல்லை என காம்பியா நாடு தெரிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்கா நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம் அந்த குழந்தைகள் உட்கொண்ட இருமல் மருந்து தான் இந்த உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்தது.

அரியானாவை சேர்ந்த மெய்டன் என்ற மருந்து நிறுவனம் சளி மற்றும் இருமலுக்காக புரோ மெத்சைன், முகா பெல்ஸ்மாலின் மகாப் மேக்தின் என்ற 4 மருந்துகளை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த மருந்தில் டயத்லைன் கிளை கோசில் மற்றும் எதிலன் கிளைகோசில் மூலப் பொருட்கள் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்பட்டு இருப்பது குழந்தைகள் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, குழந்தைகள் இறந்ததற்கு இந்திய நிறுவன தயாரிப்பான இருமல் மருந்துக்கு தொடர்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளதை தொடர்ந்து மத்திய அரசு இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் இதற்கான விசாரணையில் இறங்கி உள்ளனர்.

இந்த விவகாரத்தில் உண்மைகள் மற்றும் விவரங்களை கண்டறிய விரிவான விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, 4 மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், இந்திய இருமல் சிரப் மருந்துகளின் பயன்பாடு கட்டுப்பாட்டில் இருப்பதால் மேலும் உயிரிழப்பு இல்லை என காம்பியா நாடு தெரிவித்துள்ளது. மேலும், சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டு ஏராளமான குழந்தைகள் இறந்த நிலை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என்று காம்பாய அதிபர் அடாமா பாரோ தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News