லெபனான் சூழலுக்கு மத்தியில் இஸ்ரேல் பிரதமரிடம் போனில் பேசிய மோடி.. சொன்னது இதுதான்
- மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் பற்றி பிரதமர் நேதன்யாகுவிடம் பேசினேன்.
- சூழல் மோசமடையாமல் தடுத்து பிணைக்கைதிகள் பாதுகாப்பான முறையில் விடுதலை செய்யப்பட வேண்டும்
லெபனான்
பாலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் கடந்த ஒரே வாரத்தில் 1000 துக்கும் அதிகமான லெபனானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களைத் தேடியும், அண்டை நாடான சிரியாவுக்க்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர். இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கடந்த வெள்ளிக்கிழமைஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா தலைநகர் பெய்ரூட்டில் உயிரிழந்தார். அவ்வமைப்பின் உயர் மட்டத் தலைவர்கள் 20 பேரும் உயிரிழந்தனர்.
அமைதி
இருப்பினும் லெபனான் மீதான வான்வழி மற்றும் தாரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் நேற்றைய தினம் [செப்டம்பர் 30] அலைபேசியில் உரையாடியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மேற்குஆசியாவில் நிலவும் சூழல் பற்றி பிரதமர் நேதன்யாகுவிடம் பேசினேன். பயங்கரவாதத்துக்கு உலகத்தில் இடம் கிடையாது. பிராந்தியத்தில் நிலவும் சூழல் மோசமடையாமல் தடுத்து பிணைக்கைதிகள் பாதுகாப்பான முறையில் விடுதலை செய்யப்படுவதை உறுதி செய்யவேண்டும். அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவாக மீட்டெடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
லெபனான் சூழல் கைமீறிச் சென்றால் ஹாமாஸ் அமைப்பினரிடம் பிணைக்கைதிகளாகச் சிக்கியுள்ள இஸ்ரேலியர்களுக்கு ஆபத்து நேரும் என்ற முகாந்திரத்தில் நேதன்யாகுவிடம் மோடி தாக்குதலை நிறுத்த வலியுறுத்தியதாகத் தெரிகிறது .