உக்ரைன் போர் குறித்து விமர்சனம்- ரஷியாவில் எதிர்க்கட்சி பிரமுகருக்கு 25 ஆண்டுகள் சிறை
- இறுதிக்கட்ட விசாரணையின்போது தன் மீதான குற்றச்சாட்டை காரா-முர்சா மறுத்தார்.
- காரா-முர்சாவை கடந்த 2015 மற்றும் 2017-ல் விஷம் கொடுத்து கொல்ல முயன்றுள்ளனர்.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓராண்டைக் கடந்து நீடிக்கிறது. சமாதான பேச்சுவார்த்தைகள் பலன் அளிக்காத நிலையில், போரில் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. ரஷியாவின் இந்த ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுவெளியில் கருத்துக்களை பதிவிடும் நபர்களுக்கு ரஷிய அரசு தண்டனை வழங்கி வருகிறது.
அந்த வகையில், உக்ரைன் போர் குறித்து விமர்சித்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரும் முன்னாள் பத்திரிகையாளருமான விளாடிமிர் காரா-முர்சாவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை மனித உரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சித்துள்ளன. விளாடிமிர் காரா முர்சாவை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.
காரா முர்சா, மார்ச் 2022-ல் அரிசோனா பிரதிநிதிகள் சபையில் உரையாற்றியபோது உக்ரைன் போருக்கு எதிராக பேசி உள்ளார். இதேபோல் பிற நாடுகளிலும் பேசியிருக்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பு கைது செய்யப்பட்ட காரா முர்சா, சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது.
கடந்த வாரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற இறுதிக்கட்ட விசாரணையின்போது தன் மீதான குற்றச்சாட்டை காரா-முர்சா மறுத்தார். "புதினின் சர்வாதிகாரத்திற்கு எதிராக பல வருடமாக போராடிவருகிறேன். இதற்காக நான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். நம் நாட்டில் இருள் விலகும் நாள் வரும்" என்று காரா முர்சா கூறினார்.
காரா-முர்சாவை கடந்த 2015 மற்றும் 2017-ல் விஷம் கொடுத்து கொல்ல முயன்றுள்ளனர். அதில் இருந்து உயிர்தப்பிய அவர், ரஷிய அரசு மீது குற்றம் சாட்டினார். ஆனால் இந்த விவகாரத்தில் ரஷிய அதிகாரிகள் பொறுப்பேற்கவில்லை.
2015-ல் கிரெம்ளின் அருகே படுகொலை செய்யப்பட்ட ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் போரிஸ் நெம்ட்சோவுக்கு நெருக்கமானவர் காரா-முர்சா என்பது குறிப்பிடத்தக்கது.