உலகம்

"டிரம்பை எதிர்த்து களம் இறங்குகிறேன்... இருந்தாலும்...": ஜூனியர் கென்னடி

Published On 2024-01-10 11:17 GMT   |   Update On 2024-01-10 11:24 GMT
  • அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடியின் உறவினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது
  • டிரம்பிற்கு போட்டியிட உள்ள உரிமையை பறிப்பது அமெரிக்க குணம் அல்ல என்றார் ராபர்ட்

2024 இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களமிறங்க உள்ள நிலையில், அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

ஆனால், கடந்த 2020ல் அமெரிக்க பாராளுமன்றத்தை முற்றுகையிட தனது ஆதரவாளர்களை அனுப்பி தேச துரோகம் செய்ததாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் பெயரை வாக்கு சீட்டிலிருந்து நீக்கவும், அவர் தேர்தலில் நிற்க தடை விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

டிரம்பை தீவிரமாக எதிர்த்து வரும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களில், ஜூனியர் கென்னடி.

டொனால்ட் டிரம்பிற்கு தடை விதிக்கப்படுவது குறித்து ஜூனியர் கென்னடியிடம் கேட்கப்பட்டது.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

நான் டிரம்பின் ஆதரவாளனோ ரசிகனோ இல்லை. அதனால்தான் அவரை எதிர்த்து தேர்தலில் களம் இறங்குகிறேன்.

ஆனால், அவரை சமநிலையற்ற ஆடுகளத்தில் வெல்ல விரும்பவில்லை.

அமெரிக்க மக்களுக்கு ஒரு நேர்மையான தேர்தலை எதிர்பார்க்கும் உரிமை உண்டு. பல விவாதங்கள் நடைபெற்று, மக்கள் ஒரு முடிவுக்கு வந்து பிறகு ஒருவரை தேர்ந்தெடுக்கும் நியாயமான ஜனநாயகத்தை கோர அவர்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு.

ஒரு அமெரிக்க குடிமகனுக்கு எந்த ஆதாரமுமில்லாமல் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படுவது பெரும் தவறு. நம் நாட்டை ஒரு அறிவில்லாதவர்களின் நாடு போல் உலக அரங்கில் காட்டி விடும்.

குறுகிய பார்வை கொண்ட இந்த முடிவு எடுக்கப்பட்டால், டிரம்ப் ஒரு கடவுளை போல் கொண்டாடப்படுபவர் ஆகி விடுவார்.

இது அமெரிக்கர்கள் எடுக்கும் முடிவே அல்ல.

இது தவறான திசையில் பயணிக்கும் முடிவு. மேலும், இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

இவ்வாறு கென்னடி ஜூனியர் கூறினார்.

1961ல் அமெரிக்காவின் 35-வது அதிபராக பதவியேற்ற ஜான் எஃப். கென்னடி (John F. Kennedy), 1963ல் டெக்ஸாஸ் (Texas) மாநில டல்லாஸ் (Dallas) நகரில் சுட்டு கொல்லப்பட்டார்.

பிறகு 1968ல், அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜான் கென்னடியின் சகோதரர், ராபர்ட் எஃப். கென்னடி, கலிபோர்னியா மாநில லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சுட்டு கொல்லப்பட்டார்.

அந்த ராபர்ட் கென்னடியின் மகன்தான் ராபர்ட் எஃப். கென்னடி, ஜூனியர் (Robert F. Kennedy, Jr.) என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News