உக்ரைன் டிரோன் தாக்குதல்.. 2 விமான நிலையங்களை தற்காலிகமாக மூடிய ரஷியா
- ரஷிய அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
- 12 டிரோன்கள் அழிக்கப்பட்டதாக மேயர் செர்ஜி தெரிவித்தார்.
மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல் காரணமாக அந்நாட்டில் விமான சேவை பாதிக்கப்பட்டது. உக்ரைனின் திடீர் டிரோன் தாக்குதல் காரணமாக இரண்டு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. டிரோன் தாக்குதலால் விமான நிலையங்கள் மூடப்பட்டதை ரஷிய அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
மாஸ்கோ பிராந்தியத்தின் ராமென்ஸ்காய் மற்றும் கொலோமென்ஸ்கி மாவட்டங்களிலும், மாஸ்கோவின் தென்மேற்கே உள்ள டொமோடெடோவோ நகரத்தில் 12 டிரோன்கள் அழிக்கப்பட்டதாக மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார்.
"முதற்கட்ட தகவல்களின்படி, இந்த தாக்குதல் காரணமாக சேதமோ அல்லது உயிரிழப்புகளோ இல்லை. தாக்குதலுக்கு ஆளான பகுதிகளில் அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டுள்ளன," என்று சோபியானின் கூறினார்.
கிரெம்லினில் இருந்து தென்கிழக்கில் சுமார் 45 கிமீ தொலைவில் உள்ள ராமென்ஸ்காய் மாவட்டம், கடந்த செப்டம்பர் மாதம் ரஷிய தலைநகர் மீது உக்ரைன் மிகப்பெரிய தாக்குதலில் குறிவைக்கப்பட்டது. அப்போது ரஷிய வான் பாதுகாப்பு பிரிவுகள் 20 டிரோன்களை பதில் தாக்குதல் நடத்தி அழித்தன.