உலகம்

ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ஏமனில் அமெரிக்கா, இங்கிலாந்து அதிரடி ராணுவ தாக்குதல்

Published On 2024-01-12 02:05 GMT   |   Update On 2024-01-12 02:05 GMT
  • செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.
  • பலமுறை எச்சரித்தும் ஹவுதி தாக்குதலை தொடர்ந்ததால் அமெரிக்கா ராணுவ நடவடிக்கை.

ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் ஏமனில் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்த தொடங்கியது.

பாதுகாப்பிற்காக அமெரிக்க போர் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த போதிலும் ஹவுதி தாக்குதலை குறைக்கவில்லை. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் செங்கடலில் வணிக கப்பல்களை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவதாக அறிவித்தன.

மேலும், செங்கடலில் வணிக கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிறுத்த வேண்டும். இல்லையெனில் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. அதனுடன் இதற்கு மேல் எச்சரிக்கை விடுவிக்கப்படாது என கறாராக தெரிவித்திருந்தது.

இருந்தபோதிலும் ஆளில்லா படகை அனுப்பி வெடிக்கச் செய்தது ஹவுதி. டிரோன் மூலமாகவும் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில் நேற்று அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை ஒன்றிணைந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ஏமனில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ராணுவ தாக்குதலை நடத்தியுள்ளன.

இந்த ஒருங்கிணைந்த ராணுவ தாக்குதலில் போர்க்கப்பல், போர் விமானம் ஆகியவை ஈடுபட்டுள்ளன. டோமாஹாக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆயுத சேமிப்பு கிடங்கு, வான் பாதுகாப்பு சிஸ்டம் போன்றவற்றை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதனால் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை காசாவில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸ்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கடலில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இருந்து 27 முறை வணிக கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் நடத்தியுள்ளது.

Tags:    

Similar News