நாய் கூண்டில் அடைத்து 6 குழந்தைகள் சித்ரவதை: பெற்றோரை கைது செய்த அமெரிக்க காவல்துறை
- குழந்தைகளில் ஒருவர் டிராவிஸால் மிகவும் மோசமாக தாக்கப்பட்டதால், அக்குழந்தை இறந்துவிட்டதாக டிராவிஸ் நினைத்திருக்கிறார்.
- எனக்கும், எனது 6 வளர்ப்பு பிள்ளைகளுக்கும் எதிரான உடல் ரீதியான துன்புறுத்தல் அதிகரித்தது.
அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில், பெற்ற குழந்தைகளையே சித்ரவதை செய்த குற்றத்திற்காக டிராவிஸ் டாஸ் (31) மற்றும் அவர் மனைவி அமண்டா ஸ்டாம்பர் (33) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
அக்குழந்தைகள் கடுமையாக தாக்கப்பட்டு, உணவளிக்கப்படாமல், நாய் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டனர்.
வேலி வியூ பவுல்வர்டு மற்றும் ஃபிளமிங்கோ சாலைக்கு அருகிலுள்ள ஒரு மருந்துக்கடையில் இருந்து அமண்டா ஸ்டாம்பர் அவசர உதவி எண்ணான 911ஐ அழைத்திருக்கிறார். போலீசார் அங்கு சென்று, பல நாய்களுடன் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதன் பின்னர் நடந்த விசாரணையில், பெற்றோரின் குற்றம் தெரிய வந்ததால், 2 வயது முதல் 11 வயது வரையுள்ள 7 குழந்தைகளுக்கு பெற்றோரான இருவரும் கைது செய்யப்பட்டனர்.
குழந்தைகளில் ஒருவர் தந்தையால் மிகவும் மோசமாக தாக்கப்பட்டதால், அவர் இறந்துவிட்டதாக டிராவிஸ் நினைத்திருக்கிறார்.
கூண்டிற்குள் இருந்த 2 குழந்தைகளில் ஒரு குழந்தையின் கண்கள் வீங்கி மூடப்பட்டு இருந்தது. அக்குழந்தை உடல் முழுவதும் காயங்களுடன் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
ஃபிளமிங்கோ சாலைக்கு அருகில், ஒரு படுக்கையறை மற்றும் ஒரு குளியலறை கொண்ட ஒரு அபார்ட்மெண்டில் அத்தம்பதியினர் தங்கள் 7 குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
முன்கூட்டியே காவல்துறையை ஏன் அழைக்கவில்லை? என போலீசார் கேட்டனர். இது குறித்து காவல்துறையிடம் அமண்டா தெரிவித்திருப்பதாவது:
"நானும் அவரால் பாதிக்கப்பட்டேன். கைது செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு எனக்கும், எனது 6 வளர்ப்பு பிள்ளைகளுக்கும் எதிரான உடல் ரீதியான துன்புறுத்தல் அதிகரித்தது. எனது உயிருக்காகவும் எனது மற்ற குழந்தைகள் மற்றும் எனது குடும்பத்திற்காகவும் நான் பயந்ததனால் முன்னதாகவே காவல்துறையை நான் அழைக்கவில்லை. என் கணவர், பெல்டாலும், கயிறுகளாலும் மற்றும் கனம் வாய்ந்த பாத்திரங்களாலும் குழந்தைகளை அடிப்பார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.