சிறுவனை கொத்தடிமையாக நடத்திய இந்திய தம்பதிக்கு சிறை தண்டனை
- பள்ளியில் சேர்த்து நன்கு படிக்க வைப்பதாக அவருடைய உறவினர்களிடம் பொய் சொல்லி ஆசை காட்டி சிறுவனை கூட்டி வந்துள்ளனர்.
- சுமார் 3 ஆண்டுகளாக விடுமுறை எதுமின்றி கொத்தடிமைபோல தம்பதியிடம் அந்த சிறுவன் வேலை பார்த்துள்ளான்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்தவர் குல்பீர் கவுர் (வயது 43). இவருடைய மனைவி ஹர்மன்பீரித் கவுர் (31). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களான இவர்கள் அங்குள்ள நகரில் மளிகை கடை மற்றும் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் இந்தியாவில் இருந்து தன்னுடைய உறவினர் மகனான 18 வயது நிரம்பாத சிறுவனை அமெரிக்கா தம்பதி கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்கா அழைத்து வந்துள்ளனர். அவனை இங்கு பள்ளியில் சேர்த்து நன்கு படிக்க வைப்பதாக அவருடைய உறவினர்களிடம் பொய் சொல்லி ஆசை காட்டி சிறுவனை கூட்டி வந்துள்ளனர்.
அமெரிக்கா வந்தவுடன் அந்த சிறுவனின் பாஸ்போர்ட்டை வலுகட்டாயமாக பிடுங்கி கொண்டு தாங்கள் நிர்வகித்து வந்த பெட்ரோல் பங்க் மற்றும் மளிகை கடையில் வேலை பார்க்க விட்டுள்ளனர். தினமும் 17 மணி நேரம் வேலை, சரியான உணவு கொடுக்காமல் வேலை வாங்கி உள்ளனர்.
சுமார் 3 ஆண்டுகளாக விடுமுறை எதுமின்றி கொத்தடிமைபோல தம்பதியிடம் அந்த சிறுவன் வேலை பார்த்துள்ளான். வீடியோ கால் மூலம் தனது பெற்றோரிடம் அந்த சிறுவன் பேச முயற்சித்ததையும், தனது மகனை பார்க்க வேண்டும் என அவனுடைய பெற்றோரின் விருப்பத்தையும் ஏதேதோ காரணம் சொல்லி தவிர்த்துள்ளனர்.
சிறுவனின் பெற்றோர் எப்படியோ நிலைமையை தெரிந்துக்கொண்டு அந்த தம்பதியிடம் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு தங்களுடைய மகனை மீட்டனர். இதுகுறித்து வர்ஜீனியா போலீசிலும் புகார் கொடுத்தனர். அதன்பேரில் கோர்ட்டு விசாரணை நடந்து வந்தது. அதில் தம்பதி மேல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
இதனயைடுத்து இந்தியாவில் இருந்து சிறுவனை அழைத்து வந்து இங்கு கொத்தடிமைபோல் நடத்திய ஹர்மன்பீரித் கவுருக்கு 11 ஆண்டுகள் 3 மாதமும், அவருடைய கணவர் குல்பீர் கவுருக்கு 7 ஆண்டுகள் 3 மாதமும் சிறை தண்டணை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 1 கோடியே 84 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடாக கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.