திடீரென வந்த தும்மல்- குடல் வெளியேறியதால் அதிர்ச்சி
- சிறுநீர் பை அகற்றத்திற்கான அறுவை சிகிச்சை.
- மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன் வலி நிவாரணிகளை வழங்கினர்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்த நபருக்கு திடீரென தும்மல் ஏற்பட்டபோது அவரது குடல் வெளியே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
63 வயதான அந்த நபருக்கு 15 நாட்களுக்கு முன்னதாக சிஸ்டெக்டமி என்கிற சிறுநீர் பை அகற்றத்திற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அடி வயிற்றில் தையல் போட்டிருந்த நிலையில், சில நாட்களுக்கு பிறகு அவை மருத்துவர்களால் அகற்றப்பட்டது.
இதைதொடர்ந்து, நபர் அவரது குடும்பத்தினருடன் சாப்பிடுவதற்காக உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென தும்மல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, இருமலும் வந்துள்ளது.
அவர் தும்பிய வேகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இடத்தில் இருந்து குடல் வெளியே வந்தது. இதனால், பயந்துபோன நபர் தனது சட்டையால் வயிற்றை மூடிக் கொண்டு ஆம்புலன்சை வரவழைத்தார்.
மருத்துவ உதவியாளர்கள் விரைவாக வந்து, காயத்தை சரி செய்தனர். அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன் வலி நிவாரணிகளை வழங்கினர்.
மூன்று சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர்கள், குடல்களை மீண்டும் வயிற்றுக்குள் கவனமாக வைத்து சிறு குடலில் ஏதேனும் காயங்கள் இருக்கிறதா என்று பரிசோதித்தனர்.
காயங்கள் இல்லாத நிலையில், சம்பந்தப்பட்ட நபருக்கு வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.
இருப்பினும், தும்மலால் குடல் வெளியேறிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.