உலகம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: 2 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்தனர்

Published On 2024-10-24 02:42 GMT   |   Update On 2024-10-24 02:42 GMT
  • அமெரிக்காவில் பொதுமக்களும் தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது வாக்கை செலுத்தும் வசதி உள்ளது.
  • அமெரிக்காவில் தற்போது 16 கோடியே 10 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தேர்தல் கமிஷன் தரவுகள் கூறுகின்றன.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுகிறார்.

இந்தியாவை பொறுத்தவரையில் தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே தேர்தல் நாளுக்கு முன்பு தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மற்றபடி பொதுமக்கள் அனைவரும் தேர்தல் கமிஷன் அறிவித்த நாளிலேயே வாக்களிக்க முடியும்.

ஆனால் அமெரிக்காவில் பொதுமக்களும் தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது வாக்கை செலுத்தும் வசதி உள்ளது.

வேலை, உடல்நல பிரச்சினைகள் அல்லது பயணம் போன்ற தேர்தல் நாளில் வாக்களிப்பதில் தடைகளை எதிர்கொள்பவர்களுக்கு இது நடைமுறை தீர்வை வழங்குவதோடு மட்டுமல்லாமல், செயல்முறையை அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலம் வாக்காளர் பங்கேற்பையும் அதிகரிக்கிறது.

இதனால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின்போதும் முன்கூட்டியே வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவே இருக்கும். கோடிக்கணக்கான மக்கள் தேர்தல் நாளுக்கு முன்பே வாக்களிப்பார்கள்.

அந்த வகையில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பே முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை தொடங்கியது. பெரும்பாலான மாகாணங்களில் மக்கள் நேரடியாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். மற்ற மாகாணங்களில் மக்கள் தபால் மூலம் வாக்களிக்கின்றனர்.

அமெரிக்காவில் தற்போது 16 கோடியே 10 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தேர்தல் கமிஷன் தரவுகள் கூறுகின்றன.

இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் இதுவரை 2 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

70 லட்சத்து 80 ஆயிரம் பேர் நேரடியாகவும், 1 கோடியே 30 லட்சத்து 30 ஆயிரம் பேர் தபால் மூலமும் வாக்களித்துள்ளதாக புளோரிடா பல்கலைக்கழகத்தின் தேர்தல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

வெற்றியாளரை தீர்மானிக்கும் 7 மாகாணங்களில் ஒன்றான ஜார்ஜியா மாகாணத்தில் நான்கில் ஒரு பங்கு வாக்காளர்கள் (சுமார் 10 லட்சத்து 84 ஆயிரம் பேர்) ஏற்கனவே வாக்களித்துவிட்டதாக அந்த மாகாணத்தின் தேர்தல் அதிகாரிகள் தெரிவிததனர்.

முன்கூட்டியே வாக்களிப்பதில் குடியரசு கட்சியினர் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. நேரடியாக வாக்களித்தவர்களில் 41.3 சதவீதம் பேர் குடியரசு கட்சியினர் என்றும், 33.6 சதவீதம் பேர் ஜனநாயக கட்சியினர் என்றும் தெரியவந்துள்ளது.

அதே போல் தபால் மூலம் வாக்களித்தவர்களில் 21.2 சதவீதம் பேர் குடியரசு கட்சியினர், 20.4 சதவீதம் பேர் ஜனநாயக கட்சியினர் ஆவர்.

முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறையில் ஆசிய அமெரிக்கர்களில் வெறும் 1.7 சதவீதம் மட்டுமே வாக்களித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பல இடங்களில் இந்திய வம்சாவளியினர் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த மற்றொரு தரப்பு தகவல்கள்கூறுகின்றன.

Tags:    

Similar News