செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய டிரோன்- ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா
- 10 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து தாக்குதலை நடத்தியுள்ளனர் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்.
- F-18 போர் விமானம் இந்த தடுப்பு நடவடிக்கையில் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். இதில் செங்கடல் பகுதியில் இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தடுக்க அமெரிக்கா நடவடிக்கைகள் எடுத்து போர் கப்பல்களை நிலை நிறுத்தியுள்ளது.
இந்த நிலையில் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய டிரோன்கள், ஏவுகணைகளை அமெரிக்க ராணுவம் இடைமறித்து சுட்டு வீழ்த்தியது.
செங்கடல் பகுதியில் சென்ற கப்பல் மீது ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தினர். இதையடுத்து அமெரிக்க ராணுவப் படைகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு ஏவுகணை, டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
10 மணி நேர கால இடைவெளியில் 12 டிரோன்கள், மூன்று கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் இரண்டு தரைவழி தாக்குதல் ஏவுகணைகளை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் கப்பல்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.