இந்தியா

இந்தியாவில்தான் நாங்கள் சுதந்திரமாக உள்ளோம் - தலாய் லாமா

Published On 2023-12-14 09:25 GMT   |   Update On 2023-12-14 10:30 GMT
  • சிக்கிம் முதல்வர் தலாய் லாமாவிற்கு விருந்தளித்து உபசரித்தார்
  • புத்த மதத்தை சேர்ந்த 20 ஆயிரம் பேர் அவர் உரையை கேட்க வந்துள்ளனர்

இந்திய எல்லையோரம் உள்ள பிராந்தியமான திபெத் (Tibet), சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

திபெத்தியர்கள் புத்த மதத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் தலைமை மத குருக்கள் "லாமா" (lama) என அழைக்கப்படுவார்கள். தலைமை மத குரு தலாய் லாமா (Dalai Lama) என அழைக்கப்படுவார்.

தற்போது 14-வது தலாய் லாமா பொறுப்பில் உள்ள டென்சின் க்யாட்ஸோ, சிக்கிம் மாநில தலைநகர் கேங்க்டாக் (Gangtok) நகரில் 3-நாள் சுற்றுப்பயணம் செய்தார். அடுத்து, அம்மாநிலத்தில் உள்ள பல்ஜோர் அரங்கில் (Paljour Stadium) ஆன்மிக உரையாற்றினார்.

முன்னதாக சிக்கிம் முதல்வர் பி.எஸ். தமங் (PS Tamang) தலாய் லாமாவிற்கு விருந்தளித்து உபசரித்தார்.

தொடர்ந்து தலாய் லாமா, வடகிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரிக்கு வருகை தந்துள்ளார். அங்குள்ள சலுகாரா (Salugara) பகுதியில் உள்ள ஒரு புத்த மடாலயத்தில் போதிசித்தா எனப்படும் புத்தரின் லட்சியங்கள், சிந்தனைகள் மற்றும் நோக்கங்கள் குறித்து புத்த மதத்தினரிடம் உரையாற்றுகிறார்.

அசாம், பீகார், சிக்கிம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலிருந்தும், அண்டை நாடான நேபாளத்திலிருந்தும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அவரது உரையை கேட்க அங்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தலாய் லாமா, "எங்கள் சொந்த நாட்டிலேயே திபெத்தியர்களான நாங்கள் அகதிகளாக்கப்பட்டோம். அங்கு எங்களுக்கு அதிகளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கு (இந்தியாவில்) நாங்கள் சுதந்திரமாக உள்ளோம்" என தெரிவித்தார்.

கடல் மட்டத்திலிருந்து 4,900 மீட்டர் உயரத்தில் இருப்பதால், உலகிலேயே உயரமான பிரதேசமாக திபெத் உள்ளது. உலகின் உயரமான (8848 மீட்டர்) மலையான "மவுன்ட் எவரெஸ்ட்" (Mount Everest) திபெத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News