உலகம்

குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசி - உலக சுகாதார மையம் அனுமதி

Published On 2024-09-13 16:06 GMT   |   Update On 2024-09-13 16:06 GMT
  • நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
  • 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் இந்த நோய் பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். கடந்த வாரம் மட்டும் 107 பேர் குரங்கம்மை பாதித்து உயிரிழந்தனர். தொடர்ந்து பரவி வருவது மற்றும் உயிரிழப்பு அதிகரிப்பதைத் தொடர்ந்து, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெரியவர்கள் குரங்கம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. இது ஆப்பிரிக்கா மற்றும் இதர நாடுகளில் குரங்கம்மை நோய்த்தடுப்பு நடவடிக்கையில் முக்கிய படி என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

பவேரியன் நார்டிக் ஏ/எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசியை கவி (GAVI) மற்றும் யுனிசெப் (UNICEF) போன்ற நன்கொடையாளர்கள் மட்டுமே வாங்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. ஒரே ஒரு உற்பத்தியாளர் மட்டுமே இருப்பதால் தடுப்பூசி இருப்பு குறைவாகவே இருக்கிறது.

நன்கொடையாளர்கள் தடுப்பூசியை கொள்முதல் செய்து உடனடியாக தேவைப்படும் பகுதியில் விரைவாக விநியோகம் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் அதானம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கி இருப்பதை அடுத்து, இந்த தடுப்பூசியை இரண்டு டோஸ் என்ற அளவில் 18 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கலாம். 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

எனினும், அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் என கணிக்கப்பட்ட பகுதிகளில் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கும் இந்த தடுப்பூசி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News