ஓட்டு போடாதவனுக்கு எதுக்கு கல்யாணம்..? வருங்கால மனைவி எடுத்த முடிவு!
- தனது வருங்கால கணவருடனான நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்ள விரும்புவதாகக் கூறி ஒரு பெண் ஆன்லைனில் விவாதத்தைத் தூண்டியுள்ளார்.
- இரண்டு நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட இந்த பதிவு கிட்டத்தட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
வருங்கால கணவர் அமெரிக்க தேர்தலில் வாக்களிக்க மறுத்ததால் நிச்சயதார்த்தத்தோடு திருமணத்தை முடிக்க விரும்புவதாக பெண் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தற்போது 277 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இணையத்தில் உலாவும் நேரத்தில் வாக்களிக்கத் தவறியதால், தனது வருங்கால கணவருடனான நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்ள விரும்புவதாகக் கூறி ஒரு பெண் ஆன்லைனில் விவாதத்தைத் தூண்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ரெடிட் பதிவில், அவர்கள் புளோரிடாவில் வசிப்பதாகவும், அவருடைய வருங்கால கணவர் வாக்களிக்க மறுத்துவிட்டார் என்றும் அந்த பெண் விளக்கினார். ஏனெனில் அவருக்கு எந்த வேட்பாளர்களும் பிடிக்கவில்லை. மேலும் எங்கள் உரிமைகளை இன்னும் கட்டுப்படுத்தும் எதிர்காலத்தைப் பற்றி நான் பயப்படுகிறேன் என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.
மேலும் "எங்கள் அரசியல் கருத்துக்கள் மிகவும் ஒத்தவை. எனவே அவர் இந்த வாக்கைத் தவிர்ப்பதில் ஏன் அலட்சியமாக இருக்கிறார் என்று எனக்குப் புரியவில்லை," என்று அவர் கூறினார். "அவர் வாக்களிக்கவில்லை என்றால் நான் அவருடன் இருக்க முடியாது என்று சொல்வது கொடுமையா?" என்று பதிவிட்டு இருந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட இந்த பதிவு கிட்டத்தட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. கமென்ட்ஸ் பிரிவில், சில பயனர்கள் அவரது முடிவை ஆதரித்தாலும், மற்றவர்கள் வாக்களிப்பது தனிப்பட்ட விருப்பம் என்றும் அவர்களின் உறவைப் பாதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.