செய்திகள் (Tamil News)

இந்தியா 46.4 ஓவரில் 305 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிப்பு

Published On 2019-06-16 12:59 GMT   |   Update On 2019-06-16 12:59 GMT
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 46.4 ஓவரில் 305 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 22-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தவானுக்குப் பதில் விஜய் சங்கர் இடம்பிடித்தார்.

ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை முகமது அமிர் வீசினார். லோகேஷ் ராகுல் 6 பந்திலும் ரன்ஏதும் சேர்க்கவில்லை. இதனால் முதல் ஓவர் மெய்டனாக அமைந்தது. இருவரும் முகமது அமிர் ஓவரை மட்டும் கவனமாக விளையாடினர். மறுமுனையில் ஹசன் அலி, வஹாப் ரியாஸ் பந்து வீச்சை அடித்து விளைாடினர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

பவர் பிளே-யான முதல் 10 ஓவரில் இந்தியா 53 ரன்கள் சேர்த்தது. 12-வது ஓவரை சதாப் கான் வீசினார். இந்த ஓவரில் இந்தியா 17 ரன்கள் விளாசியது. ரோகித் சர்மா 4-வது பந்தை சிக்சருக்கும், ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கும் விளாசினார். அத்துடன் 34 பந்தில் அரைசதம் அடித்தார்.



மறுமுனையில் நிதானமாக விளையாடிய லோகேஷ் ராகுல் 69 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியாவின் ஸ்கோர் 23.5 ஓவரில் 136 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. லோகேஷ் ராகுல் 78 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி நிதானமாக விளையாடினார். அதேவேளையில் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்வம் காட்டவில்லை. இதனால் ரன் உயர்வில் சற்று தொய்வு ஏற்பட்டது.

இதனால் இந்தியா 34.2 ஓவரில்தால் 200 ரன்னைத் தொட்டது. ரோகித் சர்மா 85 பந்தில் சதம் அடித்தார். அவரது 2-வது அரைசதம் 51 பந்தில்தான் வந்தது. சதம் அடித்த பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் 113 பந்தில் 14 பவுண்டரி, 3 சிக்சருடன் 140 ரன்கள் சேர்த்த நிலையில் ஹசன் அலி பந்தில் ஆட்டமிழந்தார்.

அப்போது இந்தியாவின் ஸ்கோர் 38.2 ஓவரில் 234 ரன்னாக இருந்தது. அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தார். ஆனால், 19 பந்தில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விராட் கோலி 51 பந்தில் அரைசதம் அடித்தார். அடுத்து வந்த டோனி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்தியாவின் ஸ்கோரில் சற்று மந்தம் ஏற்பட்டது.



இந்தியா 45.4 ஓவரில் இந்தியா 300 ரன்னைக் கடந்தது. 46.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்னாக இருக்கும்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. விராட் கோலி 62 பந்தில் 71 ரன்களுடனும், விஜய் சங்கர் 6 பந்தில் 3 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர்.

ஒருவேளை மழை நீண்ட நேரம் பெய்தால், இந்தியாவின் இன்னிங்ஸ் இத்துடன் முடிவடைய வாய்ப்புள்ளது.

Similar News