செய்திகள் (Tamil News)

வீரர்களின் கூட்டு முயற்சியால் இங்கிலாந்தை வீழ்த்தினோம்- கருணாரத்னே சொல்கிறார்

Published On 2019-06-22 05:12 GMT   |   Update On 2019-06-22 09:58 GMT
வீரர்களின் கூட்டு முயற்சியால் இங்கிலாந்து அணியை வீழ்த்தினோம் என்று கேப்டன் கருணாரத்னே கூறியுள்ளார்.

லீட்ஸ்:

உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்து இலங்கை அணி 2-வது வெற்றியை பெற்றது.

லீட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன் எடுத்தது.

முன்னாள் கேப்டன் மேத்யூஸ் 85 ரன்னும், பெர்ணாண்டோ 49 ரன்னும், மெண்டிஸ் 46 ரன்னும் எடுத்தனர். ஆர்ச்சர், மார்க்வுட் தலா 3 விக்கெட்டும், ஆதில் ரஷீத் 2 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

233 ரன் இலக்கை இங்கிலாந்து எளிதில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இலங்கை வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் அந்த அணி திணறியது. 47 ஓவர்களில் 212 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆகி 20 ரன்னில் இங்கிலாந்து அதிர்ச்சிகரமாக தோற்றது.

பென் ஸ்டோக்ஸ் கடைசிவரை போராடியும் பலன் இல்லாமல் போனது. 5-வது வீரராக களம் இறங்கிய அவர் 89 பந்தில் 82 ரன் (7 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஜோரூட் 57 ரன் எடுத்தார்.

மலிங்கா 43 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். தனஞ்ஜெய டிசில்வா 3 விக்கெட்டும், உதனா 2 விக்கெட்டும், பிரதீப் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி 2-வது தோல்வியை தழுவியது. ஏற்கனவே பாகிஸ்தானிடம் 14 ரன்னில் தோற்று இருந்தது.

இலங்கையிடம் ஏற்பட்ட தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான மார்கன் கூறியதாவது:-

எங்களது ஆட்டத்திறனை செயல்படுத்துவதில் கனிசமான அளவில் தவறுகள் செய்து விட்டோம். போதுமான அளவு திறமையை வெளிப்படுத்த வில்லை. எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் போது இது மாதிரி ஒரு போட்டியில் தோல்வி ஏற்படும். இந்த ஆடுகளத்தில் பந்து வீச்சை எதிர்கொள்வது சவாலாக இருந்தது. நாங்கள் அடுத்தப் போட்டியில் எழுச்சி பெறுவோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆக்ரோ‌ஷமாக ஆடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை அணி பெற்ற 2-வது வெற்றி யாகும். ஏற்கனவே ஆப்கானிஸ்தானை 34 ரன்னில் தோற்கடித்து இருந்தது. இங்கிலாந்தை வீழ்த்தியது குறித்து அந்த அணி கேப்டன் கருணா ரத்னே கூறியதாவது:-

வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது. பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இது மாதிரியான ஆடுகளத்தில் 300 ரன்களை குவிக்க முடியாது. இதனால் 250 முதல் 275 ரன் வரை விரும்பினோம். மேத்யூசின் பேட்டிங் அபாரமாக இருந்தது.

232 ரன் எடுத்தாலும் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக செயல்பட்டு இங்கிலாந்தை கட்டுப்படுத்தினார்கள். குறிப்பாக மலிங்காவின் பந்து வீச்சு பிரமாதமாக இருந்தது. அவர் ஒரு சகாப்தம் இதே போல தனஞ்ஜெயா டிசில்வாவும் அபாரமாக வீசினார்.


இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை அணி 7-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வருகிற 28-ந்தேதி சந்திக்கிறது.

இங்கிலாந்து அணி அடுத்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 25-ந் தேதி எதிர்கொள்கிறது. 

Similar News