செய்திகள் (Tamil News)
ஸ்மித்

224 ரன்களே இலக்கு: சேஸிங் செய்து நடப்பு சாம்பியனை வெளியேற்றுமா இங்கிலாந்து?

Published On 2019-07-11 13:37 GMT   |   Update On 2019-07-11 13:37 GMT
எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு 224 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் முதலில் பேட்டிங் செய்த அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளதால் இங்கிலாந்து ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.

டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை கிறிஸ் வோக்ஸ் வீசினார். முதல் பந்தை டேவிட் வார்னர் பவுண்டரிக்கு விரட்டினார். 2-வது ஓவரை ஜாப்ரா ஆர்சர் வீசினார். ஆரோன் பிஞ்ச் தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழந்தார்.



டேவிட் வார்னர் 9 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது வீரராக களம் இறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 4 ரன்னில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

14 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தத்தளித்தது. அப்போது ஸ்மித் உடன் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து  மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டது.

அலெக்ஸ் கேரி 46 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் ரன்ஏதும் எடுக்காமல் ரஷித் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ஒரே ஓவரில் ஆஸ்திரேலியா இரண்டு விக்கெட்டுக்களை இழந்ததால், அதில் இருந்து மீண்டு வர இயலவில்லை. அப்போது ஆஸ்திரேலியா 28 ஓவரில் 118 ரன்கள் எடுத்திருந்தது.



ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஸ்மித் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.  மேக்ஸ்வெல் (22), பேட் கம்மின்ஸ் (6) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். ஸ்டார்க் 36 பந்தில் 29 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா 49 ஓவரில் 223 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

இங்கிலாந்து அணி சார்பில் ரஷித், கிறிஸ் வோக்ஸ் தலா மூன்று விக்கெட்டுக்களும், ஆர்சர் இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

பின்னர் 224 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.

Similar News