செய்திகள் (Tamil News)
வெங்சர்க்கார்

நான்கு விக்கெட் கீப்பர்கள் என்றால், 4-வது இடத்திற்கான பியூர் பேட்ஸ்மேன் இல்லையா?- வெங்சர்க்கார் சாடல்

Published On 2019-07-12 12:07 GMT   |   Update On 2019-07-12 12:07 GMT
இந்தியாவின் ஆடும் லெவன் அணியில் நான்கு விக்கெட் கீப்பர்கள் விளையாடினால், தரமான 4-வது பேட்ஸ்மேன் இல்லையா? என்று வெங்சர்க்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா 240 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் படுதோல்வியடைந்தது. உலகக்கோப்பை தொடருக்கு செல்வதற்கு முன்பே கிரிக்கெட் விமர்சகர்கள் நான்காவது இடத்தில் களம் இறங்க பியூர் பேட்ஸ்மேன் இல்லை என்று குற்றம்சாட்டினர்.

அப்போது சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் 4-வது இடத்தில் வீரர்களை களம் இறக்கிக் கொள்வோம் என்று அணி நிர்வாகம் கூறியது. லீக் போட்டிகள் முழுவதும் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடியதால் அந்தக் குறை தெரியவில்லை.

அரையிறுதியில் 5 ரன்களுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்ததால் நான்காவது பேட்ஸ்மேன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் இந்திய அணியின் தேர்வுக்கு தலைவராக திலிப் வெங்சர்க்காரும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து திலிப் வெங்சர்க்கார் கூறுகையில் ‘‘விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தொடக்கத்திலேயே ஆவுட்டாகிவிட்டால்,  4-வது இடத்தில் களம் இறங்க தரமான பேட்ஸ்மேன் தேவை என்று அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து கூறி வருகிறேன்.

இந்த பிரச்சனை அரையிறுதி வரை எழும்பவில்லை. ஏனென்றால், அவர்கள் இருவரும் ஒவ்வொரு போட்டியிலும் ரன்கள் குவித்தனர். இறுதியில் அவர்கள் இருவரும் ஆட்டமிழந்தபோது நாம் 240 ரன்களை சேஸிங் செய்ய 4-வது பேட்ஸ்மேனை தேடவேண்டிய நிலை ஏற்பட்டது.

நாம் நான்கு விக்கெட் கீப்பர்களுடன் விளையாடியது விசித்திரமாக இருந்தது. நான்கு விக்கெட் கீப்பர்களுடன் விளையாடும் ஒரே அணி இந்தியா மட்டுமே. கிரிக்கெட் வரலாற்றில் இப்படி நிகழ்ந்தது கிடையாது.

தினேஷ் கார்த்திக்கை நீங்கள் பியூர் பேட்ஸ்மேனாக களம் இறக்கி விளையாடுகிறீர்கள் என்றால், இந்தியாவில் அந்த இடத்திற்கான பேட்ஸ்மேன்களை உருவாக்குவதில் வெற்றிடம் உள்ளதா?. ரஞ்சி டிராபியில் 900, 1000 மற்றும் 1200 ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் எங்கே?. அவர்கள் தராமானவர்கள் இல்லையா? அல்லது ரஞ்சி டிராபி தரமானது இல்லையா?



நான் எந்தவொரு வீரருக்கும் எதிரானவன் இல்லை. கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரின்போது தினேஷ் கார்த்திக் திணறியதை பார்த்தேன். இங்கிலாந்து சூழ்நிலை உங்களுக்கு கட்டாயம் தெரியும். மேலும், இது 50 ஓவர் கிரிக்கெட் தொடர், டி20 கிரிக்கெட் அல்ல. ஆசையால் திட்டம் ‘பி’ற்கான வழிமுறைகளை தயாராக வைத்திருக்க வேண்டும். நான்கு விக்கெட் கீப்பர்களுடன் விளையாடும்போது உங்களுடைய விருப்பம் என்ன? நான்கு பியூர் பேட்ஸ்மேன்கள் அணியை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.

ஆடும் லெவன் அணி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. திட்டம் ‘ஏ’ அரையிறுதி வரை சரியாக இருந்தது. ஆனால், அரையிறுதியில் பிளான் ‘ஏ’ எடுபடாத நேரத்தில், திட்டம் ‘பி’-ஐ செயல்படுத்த முடியாமல் போனது’’ என்றார்.

Similar News