திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் இன்று 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்
சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவது சனிப்பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 19-ந் தேதியன்று திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.
சனிப்பெயர்ச்சி தினத்தில் திருநள்ளாறு வந்து பகவானை தரிசனம் செய்ய முடியாதவர்கள் சனிப்பெயர்ச்சிக்கு 45 நாட்கள் முன்பும், 45 நாட்கள் பின்பும் வந்து தரிசனம் செய்தால் சனிப்பெயர்ச்சியின் போது தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
எனவே, சனிப்பெயர்ச்சி முடிந்த பிறகும் அடுத்து வந்த சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் திருநள்ளாறில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து பகவானை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருநள்ளாறில் இன்று (சனிக்கிழமை) பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே திருநள்ளாறில் வந்து குவிந்த பக்தர்கள் நளதீர்த்தத்தில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று பகவானை தரிசனம் செய்து வழிபட்டனர். சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருநள்ளாறு வருகை தந்து சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
பக்தர்கள் கூட்டத்தையொட்டி டி.ஐ.ஜி சந்திரன் உத்தரவின் பேரில் திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரவீன் குமார், சுரேஷ் மற்றும் உள்ளுர் போலீ சாரும், இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் போலீசாரும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட கலெக்டர் கேசவன், தேவஸ்தான நிர்வாக அதிகாரி விக்ரந்த்ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.