தமிழ்நாடு

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் உதயநிதி: எடப்பாடி பழனிசாமி தாக்கு

Published On 2024-11-17 22:23 GMT   |   Update On 2024-11-17 22:23 GMT
  • எதையும் எதிர்கொள்ளும் சக்தி அ.தி.மு.க.விற்கு உள்ளது.
  • விவசாயிகளைப் பற்றி தி.மு.க. அரசுக்கு கவலை இல்லை என்றார்.

சேலம்:

காவிரி-சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்திய அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்காக ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தி.மு.க. திறந்து வைத்த பெரும்பாலான திட்டங்கள் கடந்த ஆட்சியில் அ.தி.மு.க. கொண்டு வந்தது. விவசாயிகளைப் பற்றி தி.மு.க. அரசுக்கு கவலை இல்லை.

காவிரி நதி நீர் பிரச்சனையை தீர்க்க கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை கொண்டுவர வேண்டும்.

கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் வேலை இல்லை. விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து ஆட்சி செய்ய வேண்டும்.

விவசாயிகள் காலில் அணிவதற்கு காலணிகூட இல்லாத நிலையில், பல கோடி ரூபாய் செலவு செய்து கார் பந்தயம் நடத்துவது தேவைதானா?

தி.மு.க. ஆட்சிக்கு வந்து 42 மாத காலம் ஆகியும் சரபங்கா வெள்ள உபரிநீர் நீரேற்று திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது.

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் உதயநிதி. அப்பா மகனைப் புகழ்ந்து பேசுகிறார். மகன் அப்பாவைப் புகழ்ந்து பேசுகிறார். இதுதான் வேடிக்கை.

உதயநிதி ஸ்டாலின் அவர்களே நாவடக்கம் தேவை. செல்வ செழிப்பில் வளர்ந்த உங்களுக்கே இவ்வளவு திமிர் என்றால், உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.

ரெய்டை பார்த்து எங்களுக்கு பயமில்லை. எதையும் எதிர்கொள்ளும் சக்தி அ.தி.மு.க.விற்கு உள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News