null
10 சதவீத உள்ஒதுக்கீட்டால் வாய்ப்பு: மருத்துவம் பயிலும் 37 அரசு பள்ளி மாணவர்கள்- விரைவில் கலந்தாய்வு தொடங்குகிறது
- கருத்து வேறுபாடு காரணமாக கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.
- ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.
புதுச்சேரி:
தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து கோப்பை கவர்னருக்கு அனுப்பியது. அப்போதைய கவர்னர் கிரண்பேடி இந்த கோப்புக்கு அனுமதி தரவில்லை.
கருத்து வேறுபாடு காரணமாக கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். இதனால் உள் ஒதுக்கீட்டிற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதோடு இந்த கோப்பும் கிடப்பில் போடப்பட்டது.
புதிதாக பொறுப்பேற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.
கடந்த மாதம் கவர்னர் தமிழிசை, அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூடி உள்ஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பியது. கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கி மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பினார்.
இதனிடையே நீட் அல்லாத கலை, அறிவியல், தொழில்படிப்புகளுக்கான 2 கட்ட கவுன்சிலிங் முடிவடைந்து, 3-ம் கட்ட கவுன்சிலிங் நடைபெற உள்ளது. பிற மாநிலங்களில் நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ கவுன்சிலிங் நடத்தப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது. மாணவர்களும் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.
ஆனால் புதுவையில் மருத்துவ கல்விக்கான கவுன்சிலிங் தொடங்கவில்லை. உள் ஒதுக்கீடு அனுமதிக்காக கவுன்சிலிங் தொடங்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்மூலம் எம்.பி.பி.எஸ். படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 37 இடங்கள் கிடைக்கும். அரசு மருத்துவக்கல்லூரியில் புதுவைக்கு 10, காரைக்காலுக்கு 2, மாகி 1 என 13 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் பிம்ஸ் 6, மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா கல்லூரிகளில் தலா 9 இடங்களும் கிடைக்கும்.
இதுதவிர பி.டி.எஸ். 11 சீட், பி.ஏ.எம். 4 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும். மருத்துவ கல்விக்கான உத்தேச தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அனுமதி கிடைத்துள்ளதால் அவர்களும் விண்ணப்பிக்க அரசு வாய்ப்பளிக்க வேண்டும்.
இதற்காக இன்று மாலை 5 மணி வரை அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க சென்டாக் அனுமதி அளித்துள்ளது.
விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். இதன்பிறகு மீண்டும் இறுதி தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். இதன்பிறகு கவுன்சிலிங் நடைபெறும். இதனால் ஓரிருநாளில் மருத்துவ கல்விக்கான சென்டாக் கவுன்சிலிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.